துவர்க்கும் சுண்டைக்காய் கார குழம்பு செய்வது எப்படி?

துவர்க்கும் சுண்டைக்காய் கார குழம்பு செய்வது எப்படி?

சுண்டைக்காய் என்றாலே அலறி அடித்து ஓடுபவர்கள்தான் அதிகம். ஆனால், சுண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள்  என்னென்ன என்பது தெரிந்தால் நிச்சயம் கேட்பாரற்றுக் கிடக்கும் சுண்டைக் காய்க்குக்கூட டிமாண்ட் பெறுகிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜீரணம் முதல் சீரான எடை வரை எண்ணற்ற பலன்களைத் தருவதில் சுண்டைக்காய் சிறந்தது. சிறியது என்றாலும், அதன் கீர்த்தி மிகப் பெரியது!

இதன் லேசான கசப்புடன் கூடிய துவர்ப்பு சுவை உடல் எடையை குறைக்கும். தைராய்டு கோளாறுகள் மற்றும் நீரிழிவு பாதிப்பைக் கட்டுப்படுத்தும்.

மேலும் வயிற்றுப் பூச்சிகள் அழியும். பசியின்மை மறையும் .நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்கும் நெஞ்சு சளியைக் கரைக்கும்.

இத்தனை மருத்துவ பலன்கள் கொண்ட இதனை வற்றலாகவும், குழம்பாகவும் செய்து உண்ணலாம். குறிப்பாக சுண்டைக்காய் வற்றல் மருத்துவ உலகில் மிகுந்த பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்தப் வற்றலை பொடி செய்து  5  கிராம் அளவில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். வற்றல் பொடியை தண்ணீருடன் கலந்து சாப்பிட வேண்டும் என்பது முக்கியம். இதன் மருத்துவரீதியான உபயோக முறையை தகுந்த நிபுணரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தி நலம் பெறலாம்.

இனி சுண்டைக்காய் காரக்குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்...

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய்- 50 கிராம், சின்ன வெங்காயம்- 25 கிராம், தக்காளி- 2, புளி - தேவையான அளவு, சாம்பார் மிளகாய் தூள்- தேவையான அளவு, மஞ்சள்தூள் – சிறிது,   உப்பு - தேவையான அளவு,வெல்லம் – சிறிது,

தாளிக்க தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - ஒரு ஸ்பூன், வெந்தயம் - அரை ஸ்பூன், கடலைப்பருப்பு- அரை ஸ்பூன், பூண்டு- பத்து அல்லது 12 பல் கருவேப்பிலை சிறிது

செய்முறை:

முதலில் சுண்டக்காயை சிறிது பிளந்து வெட்டிக் கொள்ளவும். தக்காளியை தனியே அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து அதில் சாம்பார் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் கலந்து வைக்கவும். அட கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பொன்னிறமாக வதங்கியதும்  சுண்டைக்காயை சேர்த்து, வதக்கவும். அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, தக்காளி நிறம்மாறி வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கவும். நன்கு கொதித்ததும் தேவையான  உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து எண்ணெய்  பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும் . சுவையான  சுண்டைக்காய் காரக்குழம்பு ரெடி.

பச்சை சுண்டைக்காய் கிடைக்காதவர்கள் கடைகளில் கிடைக்கும் சுண்டைக்காய் வற்றலிலும் இந்த குழம்பை செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com