நவீன காலத்தில் பலரும் சப்பாத்தி, நாண் சாப்பிடுவதை அதிகமாக விரும்புகின்றனர். அதிலும் பட்டர் நாண், சீஸ் நாண், தந்தூரி நாண் என வகைவகையான நாண் இருக்கையில் நாணை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இந்த நாண், தந்தூரி ரொட்டி செய்ய ஓவன் அல்லது தந்தூரி அடுப்பு தேவைப்படுகிறது. எனவே தான் மக்கள் இதனை உணவகங்களுக்கு சென்று வாங்கி சாப்பிடுகின்றனர்.
இருப்பினும், இந்த தந்தூரி ரொட்டியை வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம் தெரியுமா? இதற்கு ஓவனோ அல்லது தந்தூரி அடுப்போ தேவையில்லை. வீட்டில் இருக்கும் குக்கரை வைத்தே செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
1 கப் கோதுமை மாவு
1/2 ஸ்பூன் உப்பு
தயிர்
சிறிதளவு நெய்
பெரிய பிரஷர் குக்கர்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை விளக்கம்:
முதலில் தந்தூரி ரொட்டி செய்வதற்கு மாவு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு சரியான பதத்தில் இருந்தால் மட்டுமே ரொட்டி ரெஸ்டாரெண்டுகளில் செய்வதுபோல கிடைக்கும். ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து அதில் உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். வழக்கமாக நீங்கள் சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட தந்தூரி ரொட்டிக்கான மாவு சாஃப்டாக இருக்க வேண்டும். மாவு பிசைந்த உடன் அதன் மீது சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு துணி போட்டு மூடி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
இதற்கு இடையில் பிரஷர் குக்கரை மூடி போடாமல் அதிக தீயில் இரண்டு நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
மாவு ஊறியதும் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டை பயன்படுத்தி விரித்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் பொருந்தும் அளவுக்கு மாவை விரித்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ரொட்டி மிகவும் மெல்லியதாகவும் இருக்கக் கூடாது.
விரித்து வைத்த ரொட்டியின் இருபுறத்திலும் தேவையான அளவு தண்ணீர் பயன்படுத்தி அது பிரஷர் குக்கரில் ஒட்டும் வகையில் வைக்கவும். அதே சமயத்தில் அதிகப்படியாகவும் தண்ணீர் சேர்த்து விட்டால் மாவு கொழ கொழப்பாக மாறிவிடும். இந்த ரொட்டி ஐந்து நிமிடங்களுக்கு சூடாகட்டும்.
இப்பொழுது குக்கரை தலைகீழாக கவிழ்த்து திறந்திருக்கும் பக்கம் நெருப்பில் படுமாறு வைக்கவும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் ரொட்டியை வேக வைக்கவும். ரொட்டிகள் கோல்டன் பிரவுன் நிறத்திற்கு மாறியதும் அவற்றை வெளியே எடுத்து அதன் மீது நெய் தடவி பரிமாறவும்.