திருப்பதியில் லட்டுக்கு பிறகு மிகவும் புகழ் பெற்றது ஸ்ரீவாரி வடையாகும். இந்த வடையை திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம். இந்த வடை சீக்கிரம் கெட்டுப்போகாமல் அதிக நாள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்பதால் மக்களும் விரும்பி வாங்கி செல்கிறார்கள். சரி வாங்க ஸ்ரீவாரி வடையை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யறதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து- 300கிராம்.
இடிச்ச மிளகு-1 தேக்கரண்டி.
இடிச்ச ஜீரகம்-1 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
எண்ணெய்/ நெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பாத்திரத்தில் 300கிராம் கருப்பு உளுந்தை எடுத்து தண்ணீர் ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
நன்றாக ஊறியதும் நன்றாக அலசி விட்டு தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு கட்டியாக அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அதில் 1 தேக்கரண்டி இடிச்ச மிளகு, 1 தேக்கரண்டி இடிச்ச ஜீரகம், ½ தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளவும். முக்கியமாக இந்த வடை செய்யும்போது தண்ணீர் சேர்க்கவே கூடாது.
ஒரு பட்டர் ஷீட்டில் சிறிது எண்ணெய் தடவி விட்டு எழுமிச்சை பழம் அளவிற்கு மாவை எடுத்து அந்த பட்டர் ஷீட்டில் வைத்து தட்டவும். முடிந்த அளவிற்கு மெலிதாக தட்டவும்.
பிறகு தட்டிய மாவை எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் போடவும். எண்ணெய் மிகவும் சூடாக இருக்க கூடாது, மிதமான சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். முதலில் 5 நிமிடத்திற்கு வேக விடுங்கள். பிறகு திருப்பி போட்டு 8 நிமிடம் வேகவைக்கவும்.
திருப்பதியில் இந்த ஸ்ரீவாரி வடையை நெய்யிலேயே சுட்டு எடுப்பார்கள். அதுதான் அங்கே பிரபலமாகும். வடையிலே இருந்து வந்து கொண்டிருக்கும் நுரை அடங்கி வெந்தய நிறத்திற்கு வந்ததும் வடை வெந்துவிட்டதாக அர்த்தம். இப்போது வடையை நன்றாக ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். ஒரு மாதம் ஆனாலும் கெட்டு போகாது. இந்த வடை மிகவும் ஆரோக்கியமானது, அதுமட்டுமில்லாமல் செய்ய தேவையான பொருட்களும் எளிமையாக கிடைக்க கூடியது என்பதால் சுலபமாக செய்யலாம். எனவே நீங்களும் வீட்டில் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.