
நம்முடைய இந்திய சமையலறையில் குக்கர் மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அரிசி பருப்பு, காய்கறிகள் போன்றவற்றை நொடியில் சமைக்கவும், கேஸ் செலவை சேமிக்கவும், அவசரத் தேவைக்கும் குக்கர் மிகவும் பயன்படுகிறது. அதே சமயம் குக்கரை பயன்படுத்தும்போது கவனக்குறைவாக செயல்பட்டால் விபத்து நேருவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் குக்கர் வெடிப்பதற்கான 3 அத்தியாவசிய காரணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.காற்றோட்டக் குழாயில் அடைப்பு
பிரஷர் குக்கரில் உணவு சமைக்கப்படும் பொழுது உள்ளே நீராவி மூலமாக பிரஷர் உருவாகி விசில் வழியாக வெளியேறுகிறது. அரிசி அல்லது பருப்பை சில நேரங்களில் சமைக்கும் பொழுது காற்றோட்ட குழாயில் சில துகள்கள் சிக்கிக் கொள்வதால், அப்போது முறையாக சுத்தம் செய்யாமல் விட்டால் குழாய் அடைபட்டு விசில் வராமல் போகும்.
அப்போது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வெளியே வர வழி இல்லாதபோது குக்கர் வெடித்துவிடும். ஆகவே ஒவ்வொரு முறை பிரஷர் குக்கரில் மூடியை பயன்படுத்தும் பொழுதும் காற்றோட்ட குழாயை சரிபார்த்து சுத்தம் செய்து பயன்படுத்துவதே சிறந்தது.
2. பாதுகாப்பு வால்வின் செயலிழப்பு
குக்கரில் பொருத்தப்பட்ட சிறிய பகுதியான பாதுகாப்பு வால்வு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. குக்கரில் சமைக்கும் பொழுது அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வந்தால், வெடித்து அழுத்தத்தை பாதுகாப்பு வால்வு வெளியிடுகிறது. பாதுகாப்பு வால்வு வேலை செய்யவில்லை என்றால் குக்கர் நேரடியாக வெடிக்க கூடும் என்பதால் இது நன்றாக இருப்பது போல் தெரிந்தாலும் ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்பது நிபுணர்களின் கூற்றாக உள்ளது.
3. குக்கரை அதிகமாக நிரப்புதல்
அரிசி பருப்பு போன்றவற்றை உப்பு சேர்த்து குக்கரில் சமைக்கும்பொழுது அதன் அளவு அதிகரிக்கும். குக்கரின் கொள்ளளவை விட அதிகமாக நிரப்பினால் உள்ளே நீராவி வெளியேற இடம் இல்லாமல் அழுத்தம் வெளியேறாது. இதனால் குக்கர் ஆபத்தான கட்டத்தை எட்டி வெடிக்க வாய்ப்பு உள்ளதால் ஒருபோதும் குக்கரை முழுமையாக நிரப்பக் கூடாது. குக்கரின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கு நிரப்புவதே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தவிர ஐஎஸ்ஐ முத்திரை குத்தப்பட்ட குக்கர்களை மட்டும் பயன்படுத்துவதே சிறந்தது. மலிவான குக்கர்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது தீ விபத்து அபாயத்திலிருந்தும் நம்மை காக்கும்.