
தூதுவளை இலை, பூ, காய், வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன்கொண்டவை. தூதுவளை இலையை தொடர்ந்து நம் உணவில் பயன்படுத்தி வந்தால், சளி, இருமல், ஆஸ்துமா, தைராய்டு போன்ற நோய்களிலிருந்து விடுபடலாம்.மேலும், சர்க்கரை நோய் மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. (Thooduvala thuvayal and rasa powder)
தூதுவளைத் துவையல்
தேவையான பொருட்கள்:
தூதுவளை இலை மற்றும் பழங்கள் – இரண்டு கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2
பூண்டு (உரித்தது) – 20 பல்
புளி – சிறு கோளி குண்டு அளவு
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
நல்லெண்ணெய் – 50 ml
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
தூதுவளை இலை மற்றும் பழங்களை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் பாதி அளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம், மிளகு சேர்த்து வறுக்கவும்.
பின்னர், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தூதுவளை இலை மற்றும் பழங்களை சேர்த்து வதக்கவும்.
பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி ஆறவிடவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். ஆறவிட்டுப் பிசைந்து சூடான சாதத்தில் பரிமாறலாம்.
தூதுவளை இலை ரசப்பொடி
தேவையான பொருட்கள்:
தூதுவளை இலை மற்றும் பழங்கள் – 1 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பாசிப்பருப்பு – ½ கப்
மிளகாய் வற்றல் – 4
பூண்டு (உரித்தது) – 20 பல்
புளி – எலுமிச்சை அளவு
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 4 ஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் – அரைக்கப்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுக்கவும். தூதுவளை இலை, பழங்கள் மற்றும் கறிவேப்பிலையை நீரில் சுத்தம் செய்து நன்கு உலர்த்தி எடுக்கவும்.
புளியை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் புளியை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். கல் உப்பையும் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் ¼ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதே வாணலியில் தூதுவளை இலை மற்றும் கறிவேப்பிலையை வறுத்து எடுக்கவும்.
பாசிப்பருப்பை வறுத்து எடுத்த பின் மீதமுள்ள எண்ணெயில் சீரகம், மிளகு, கொத்தமல்லி விதைகள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். அனைத்துப் பொருட்களும் ஆறியதும், மிக்ஸியில் பொடித்து இறுதியில் பூண்டையும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஒரு தட்டில் பரப்பி நன்கு ஆறியதும் airtight container-ல் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
பயன்பாடு:
இந்த ரசப்பொடியை தினசரி ரசம் வைக்கும்போது ஒரு டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது, இரண்டு தக்காளிகளை வேகவைத்து மசித்து அதனுடன் இந்தப் பொடியை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தால் சுவையான தூதுவளை ரசம் தயார்!