
இட்லி மாவு அரைக்காமலே ருசியான, மிகவும் சாப்டான இட்லி செய்து விட முடியும்.
அவல் கால் கிலோ
வெந்தயம் ஒரு ஸ்பூன்
உளுந்து 2 ஸ்பூன்
தயிர் ஒரு கப்
பேக்கிங் சோடா அரை ஸ்பூன்
வெறும் வாணலியில் அவல், உளுத்தம் பருப்பு, வெந்தயம் மூன்றையும் சேர்த்து சூடு வர வறுத்து சிறிது ஆறியதும் மிக்சியில் நைஸ் ரவையாக போடிக்கவும். இதில் ஒரு கப் தயிர், தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அதில் பேக்கிங் சோடா அரை ஸ்பூன் கலந்து கலக்கி விடவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லியாக வார்த்து எடுக்க பஞ்சு போன்ற மென்மையான இட்லி தயார்.
இதையே கொஞ்சம் ரிச்சாக செய்ய வேண்டும் என்றால் பொடித்த முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை ஆகியவற்றை சிறிது நெய்யில் வறுத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு , கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டி இட்லி வார்க்க கண்ணை மட்டும் கவராது நாவிற்கும் சிறந்த விருந்தாக அமையும்.
அவல் தோசை:
அவல் 200 கிராம்
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
வெந்தயம் ஒரு ஸ்பூன்
தயிர் ஒரு கப்
அரிசி மாவு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தாளிக்க : கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 2
செய்முறை: வெறும் வாணலியில் அவல், உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சூடு வர வறுத்து மிக்ஸியில் நைஸ் ரவையாக பொடித்துக் கொண்டு தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து நீர் விட்டு கலக்கி தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும். இதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ,சீரகம் ,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை நல்லெண்ணெயில் தாளித்துக் கொட்டி கலந்து மெல்லிய தோசைகளாக வார்க்க மிகவும் ருசியாக இருக்கும் . புளிக்க வைக்க வேண்டாம் உடனடியாக செய்யலாம். செய்வதும் எளிது. தொட்டுக்கொள்ள மிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
அவல் குழிப்பணியாரம்:
மேற்குறிப்பிட்ட அதே அளவுதான் அதே செய்முறை தான். ஆனால் தோசை மாவு பதத்திற்கு கரைக்காமல் இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்து, சோடா உப்பு அரை ஸ்பூன் கலந்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் தாளித்துக் கொட்டி குழிப்பணியாரக் கல்லில் விட்டு இருபுறமும் நன்கு சிவக்க எடுக்க ருசியான குழிப்பணியாரம் தயார்.
பொருள் ஒன்றுதான். ஆனால் அவலை வைத்து இட்லி, தோசை, மணக்க மணக்க குழிப்பணியாரம் செய்து அசத்தலாம்.