கொளுத்தும் வெயிலில் குளுகுளுனு சாப்பிட இன்ஸ்டண்ட் ரசமலாய்! பத்தே நிமிடங்களில் செய்யலாம்!

Rasamalai
Rasamalai
Published on

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏசி இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு சூரியன் சுட்டெரிக்கிறது. அதோடு இல்லாமல் சூரியன் நமது எனெர்ஜியையும் உறிஞ்சு வருகிறது. இதனால் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அனைவருக்கும் தாகம் அதிகரிக்கும். 

அடிக்குற வெயிலுக்கு குளு குளுனு ஏதாவது சாப்பிடலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அதுவும் சீக்கிரம் செய்யக்கூடிய ஒரு டிஷ் என்றால் யாருதான் செய்யாமல் இருப்பார்கள். எப்போதும் வெயிலுக்கு லெமன் ஜூஸ், சர்பத் என்று குடித்து கொண்டே இருந்தால்...? வித்தியாசமாகவும், இன்ஸ்டண்டாகவும் இந்த ரசமலாய் செய்து ஜில்லென சாப்பிட்டு பாருங்கள் அமிர்தமாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

காய்ச்சிய பால் (குளிர்ந்த நிலையில்) ஆடையுடன் - அரை லிட்டர்

குங்குமப்பூ - தேவையான அளவு

கண்டென்ஸ்ட் மில்க் (அ) சுகர் பவுடர் - ஒரு பவுல்

முந்திரி - ஒரு கப்

ஏலக்காய் - 4 துண்டு

பன்னீர் - 5 துண்டுகள்

பால் பவுடர் - 1 ஸ்பூன்

ப்ரட் பீஸ் - உருண்டைகளுக்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்

செய்முறை:

முதலில் காய்ச்சிய பாலை ஆடையுடன் பிரிட்ஜில் வைக்க வேண்டும். இந்த குளிர்ந்த பாலை வெளியே எடுத்து ஆடையை நன்றாக நசுக்கி வைத்து கொள்ளவும். பிறகு குங்குமப்பூவை தண்ணீரில் கலந்து அதை இந்த பாலில் ஊற்றிவிட்டு, கரைத்த ஆடையையும் சேர்த்துவிடவும். இனிப்பு சுவைக்காக சுகர் பவுடரையோ, கண்டஸ்ட் மில்கையோ தேவையான அளவு கலந்து விட வேண்டும். மேலும் அதில் ஒரு ஸ்பூன் பால் பவுடர் கலந்து கொண்டால் சுவை தூக்கலாக இருக்கும். இல்லாதவர்கள் தவிர்த்து விடலாம்.

பிறகு ரசமலாய் உருண்டைகள் செய்ய, முந்திரி பருப்பு, ஏலக்காய், பன்னீர், சர்க்கரை என அனைத்தையும் சேர்த்து மாவு பதத்தில் அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அதை உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்து கொள்ளவும். 

அதையடுத்து, பிரட்டின் கார்னர்களை வெட்டி விட்டு அந்த பிரட் பீஸை கலந்து வைத்திருக்கும் இனிப்பு பாலில் முக்கி உருண்டைகளை அதில் மூடி வைத்து மொத்த உருண்டைகளாக உருட்டி எடுத்து தனியாக கிண்ணத்தில் வைக்கவும். இப்படி எத்தனை பன்னீர் உருண்டைகள் இருக்கிறதோ அதை பாலில் நனைத்த பிரட்டால் முக்கி உருண்டை உருண்டையாக பிடித்து வைத்து கொள்ளவும். அவ்வளவு தான். அதன் மீது ரெடி பண்ணி வைத்திருக்கும் ஜில் பாலை ஊற்றினால் குளு குளு ரசமலாய் தயார்.

வெயிலுக்கு சாப்பிட தொண்டைக்கு இதமாக இருக்கும். இதை செய்ய 10 நிமிடங்கள் கூட ஆகாது. பாலை மட்டும் காய்ச்சி எடுத்துவிட்டால் போதும். அடுப்பே பற்ற வைக்காமல் சீக்கிரமே வெயிலுக்கு ஒரு சூப்பர் டெசர்ட் ரெடியாகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com