மொறு மொறு தோசைக்கு பின்னால் இப்படியொரு வரலாறு இருக்கிறதா?
இந்தியர்களின் அன்றாட காலை உணவுகளில் தோசை இன்றியமையாததாகும். அதிலும் மொறு மொறு தோசை அதனுடைய சுவைக்காகவும், நிறத்திற்காகவும், மணத்திற்காகவும் உலகம் முழுவதும் பிரபலமாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த தோசை உருவான கதை தெரியுமா? அதைப் பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.
தோசை கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில்தான் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக சான்றாய் 12 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் சாலுக்கிய மன்னன் சோமேஸ்வரனால் இயற்றப்பட்ட ‘மனசோலசா’ என்ற நூலில் ‘தோதசக்கா’ என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளதை கூறுகிறார்கள்.
இன்னும் சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், தோசை தமிழ்நாட்டில்தான் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதேமாதிரி இந்த தோசைக்கான விளக்கமும் கே.டி. ஆச்சாரியா என்ற வரலாற்று ஆய்வாளர் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 1930ல் மும்பையில் ஆரம்பித்த உடுப்பி ஹோட்டல் மூலமாக தோசை வடஇந்தியாவில் பிரபலமடைந்தது.
தோசையை அதிகமாக சைவத்தை விரும்பும் மக்களும், கோதுமை அலர்ஜி உள்ளவர்களும் விரும்பி உண்கிறார்கள். தென்இந்தியாவில் அரிசியினால் தயாரிக்கப்படும் இந்த தோசை அதிக கார்போஹைட்ரேட்டும், குறைவான கலோரிகளும் கொண்டுள்ளதால் டயட்டில் இருப்பவர்கள் மட்டுமில்லாமல் வயிறு சம்மந்தமான பிரச்னை உள்ளவர்களும் எடுத்துக்கொள்கிறார்கள். தோசையில் உடலுக்கு தேவையான புரதமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசி, உளுந்து, வெந்தயம், உப்பு சேர்த்து அரைத்து புளிக்க வைத்து தயாரிக்கப்படும் தோசையில் வைட்டமின் ஏ மற்றும் பி அதிகமாக உள்ளது. தோசையை விதவிதமான வெரைட்டிகளில் தயாரிக்கிறார்கள். மசாலா தோசை, நெய் தோசை, வெங்காய தோசை, கல் தோசை, பீசா தோசை, பன்னீர் தோசை, சீஸ் தோசை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மொறு மொறு தோசையை பரிமாறும்போது அதனுடன் பலவிதமான சுவைகளிலும் மற்றும் பலவண்ணங்களில் சட்னிகளை சேர்த்து பரிமாறுவதும் இதன் சிறப்பாகும். தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி, புதினா சட்னி என்று கண்ணை கவர்வதாக இருக்கும். முக்கியமாக தோசையை சாம்பாருடன் சேர்த்து சாப்பிடவே பலரும் விரும்புவார்கள்.
இன்று இந்த தோசை இந்தியாவில் மட்டுமில்லாமல் மலேசியா, லண்டன், சிங்கப்பூர் என்று வெளிநாடுகளிலும் பலரால் விரும்பப்படும் உணவாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.