
மழைக்கால நோயை விரட்ட ஸ்பெஷல் சமையல்...
இஞ்சி கேக்
தேவையானவை: இஞ்சி – 300 கிராம், சர்க்கரை – 300 கிராம், கசகசா – 2 டேபிள் ஸ்பூன், பால் ஏடு – 100 கிராம், பால் – 100 மில்லி.
செய்முறை: கசகசாவை நன்றாக அரைக்க வேண்டும். பிறகு இஞ்சியையும், கசகசாவையும் போட்டுப் பாலை விட்டு மிக்சியில் நன்றாக அரைக்க வேண்டும். சர்க்கரை, பால் ஏடு இரண்டையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அடி பிடிக்காமல் கிளற வேண்டும். கால்மணி நேரம் ஆனதும் ஒட்டாமல் உருண்டு திரண்டு வரும். அப்போது அதைச் சிறிது நெய் தடவிய தட்டில் விட்டு ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.
இஞ்சி சட்னி
தேவையானவை: இஞ்சி – 50 கிராம், மிளகாய் வற்றல் – 10, புளி – 1 உருண்டை, வெல்லம் – துருவியது, 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், நல்லெண்ணெய் – 50 கிராம்.
செய்முறை: இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் இஞ்சியை வதக்க வேண்டும். மிளகாயையும் நிறம் மாறாமல் வறுத்து எடுக்க வேண்டும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, வெந்தயத் தையும் பொரித்து எடுத்து அப்படியே ஆற வைத்து புளியை ஓடெல்லாம் இல்லாமல் நீக்கி வெந்நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். ஊறியதும் புளி தண்ணீரை கெட்டியாக்கி இஞ்சி, உப்பு, மிளகாய் சேர்த்து நைஸாக அரைக்க வேண்டும். கடைசியில் வெல்லம், எண்ணெயோடு கடுகு, வெந்தயத்தையும் சேர்த்து அரைத்தெடுக்க இஞ்சி சட்னி ரெடி.
இஞ்சிப் பச்சடி
தேவையானவை: இஞ்சி – 1 பெரிய துண்டு, சிறிய வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 5, தயிர் – 100 கிராம், உப்பு – தேவையானது.
செய்முறை: இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக்கி வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்து நறுக்கிய இஞ்சி மற்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிரில் உப்பைச் சேர்த்து, தாளித்து வைத்திருக்கும் கலவையைக் கொட்டிக் கிளற வேண்டும்.
இஞ்சி பிஸ்கட்
தேவையானவை: கோதுமை மாவு – 250 கிராம், இஞ்சி – 50 கிராம், நெய் – 50 கிராம், எண்ணெய், உப்பு – தேவை யானவை.
செய்முறை: நெய்யை நுரை வரும்படி அடித்து கோதுமை மாவு, துருவிய இஞ்சி இரண்டையும் சேர்த்து உப்பு கலந்து அப்பளங்களாக இட வேண்டும். துண்டுகள் போட்ட பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
இஞ்சித் துவையல்
தேவையானவை: இஞ்சி – 50 கிராம், பச்சை மிளகாய் – 4, தேங்காய் – 1 கீற்று, உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன், பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையானது.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், சிறு சிறு துண்டாக நறுக்கிய தேங்காய், தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கிய பின் அரைக்க வேண்டும்.