மாங்காய் ஜாம்
தேவையான பொருட்கள்:
மாங்காய்--1/2 கிலோ
சர்க்கரை -1 கிலோ, சுண்ணாம்பு- 10 கிராம்
உப்பு-10 கிராம்
செய்முறை:
மாங்காயைத் தோல் சீவி மெலிதாகச் சீவிக் கொள்ளவும். நீரில் சுண்ணாம்பைக் கரைத்து மாங்காயைப் போட்டு இரண்டு மணி நேரம் வைக்கவும். பிறகு நீரை இறுத்து விட்டு வேறு சுத்தமான நீர் விட்டு கழுவவும். பிறகு உப்பைப் பொடி செய்து போட்டு அரை மணி நேரம் வைத்திருந்து மீண்டும் சுத்தமான நீரில் கழுவவும்.
ஐநூறு மி.லி .நீருடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு மாங்காயைப் போடவும். மாங்காய் நன்றாக மசிந்து சுருள் பதத்துக்கு வந்ததும் இறக்கி, ஆறிய பிறகு வாயகன்ற பாட்டில்களில் நிரப்பவும்.
வெந்தய மாங்காய்:
அதிக புளிப்பு இல்லாத முற்றிய மாங்காய்கள் இதற்குத் தேவை. மாங்காயைச் சுத்தமாகக் கழுவி சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு தேக்கரண்டி வெந்தயம், பட்டாணி அளவு பெருங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து ஆறியபிறகு பொடி செய்து கொள்ளவும் .
தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி ,ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி ,வெந்தய பொடி ஆகியவற்றை மாங்காய் துண்டுகளுடன் சேர்க்கவும் . ஒரு கரண்டி நல்லெண்ணெயை கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் கடுகு போட்டு தாளித்து சூட்டோடு மாங்காய் துண்டுகளின் மீது ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும்.
மூன்று நாட்கள் ஊறிய பிறகு உபயோகிக்கலாம். மாதக்கணக்கில் வரும்படி இந்த ஊறுகாயைப் போட்டு வைப்பதை விட அவ்வப்போது ஒரு வாரத்துக்கு வேண்டியதை தயார் செய்து கொள்ளலாம். மணமும் ருசியும் அசத்தலாக இருக்கும்.
மாங்காய் தொக்கு:
இதற்கு நல்ல புளிப்பும் கொட்டை பிடித்ததாகவும் உள்ள மாங்காய்கள் தான் ஏற்றது. மாங்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மெல்லிய வில்லைகளாகவும் சீவிக்கொள்ளலாம் .
வானலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி கடுகைப் போட்டு தாளித்துக் கொண்டு, புளியங்கொட்டை அளவு பெருங்காயத்தைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டு கரண்டி நல்லெண்ணெய் விட்டு சீவிய மாங்காய், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, தேவையான உப்புப் போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
மாங்காய் நன்றாக வெந்து துவையல் போல் ஆனதும் தேவையான மிளகாய்ப் பொடி சேர்த்து மேலும் கிளரவும். நன்கு சுருண்டு வரும்பதத்தில் அடுப்பிலி ருந்து இறக்கி பிறகு பாட்டில்களில் நிரப்பவும்.
நார் பிடிக்காத மாங்காயாக இருந்தால் தொக்கு வெண்ணெய் போல் இருப்பதுடன், மிகவும் ருசியாகவும் இருக்கும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். ஒரு மாதம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
மாம்பழ சர்பத்:
தேவையான பொருட்கள்:
மாம்பழச் சாறு- 100 கிராம் சர்க்கரை- 200 கிராம்
தண்ணீர்- 100 கிராம், சிட்ரிக் ஆசிட் 0.4 கிராம ்
பொட்டாசியம் மெடா பை சல்பேட்- 0.4 மாம்பழ எசன்ஸ் -அரை ஸ்பூன்
செய்முறை:
மாம்பழத்தைத் தோல் சீவி நன்றாகக் கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொண்டு மசித்து கூழாகச் செய்து கொள்ளவும். மிக்ஸியில் போட்டும் மசித்து கொள்ளலாம். இதில் 100 கிராம் எடுத்து தனியே வைக்கவும்.
சர்க்கரையை நீர் சேர்த்துக் கலக்கி சர்பத்தாகச் செய்து ஆறவைக்கவும். நன்றாக ஆறியதும் பழச்சாற்றைச் சேர்த்து கலக்கவும். சிட்ரிக் ஆசிட் , எசன்ஸ் சேர்த்து பொட்டாசியம் மெடா பை சல்பேட்டை பொடி செய்து நீர் விட்டுக் கரைத்து சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கழுவி சுத்தம் செய்யப்பட்ட பாட்டில்களில் நிரப்பி வைக்கவும்.
குறிப்பு: பொட்டாசியம் மெடா பை சல்பேட் வேண்டாதவர்கள் இதைத் தவிர்த்து விடலாம். இதை சேர்த்தால் கடைகளில் கிடைப்பது போல் சர்பத் ருசிக்கும்.