
பலாப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
கொட்டை நீக்கிய நன்கு கனிந்த பலாச்சுளைகள்- ஒரு கப்
வெல்லத் துருவல்- முக்கால் கப்
நெய்- கால் கப்
ஓடித்து வறுத்த முந்திரி துண்டுகள்- கைப்பிடி அளவு
ஏலப்பொடி- அரை டீஸ்பூன்
செய்முறை:
பலாச்சுளைகளை குக்கரில் கொஞ்சமாக நீர் விட்டு ஒரு விசில் வைத்து எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்துவிடவும். பின்னர் வெல்லத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு பாகு பதம் வரும் வரை கொதிக்கவிட்டு, அதில் அரைத்து வைத்த பலாச்சுளை விழுதை போட்டு நன்கு கிளறவும்.
பலாப்பழ விழுது வெல்லப்பாகில் நன்றாக கலந்த பிறகு நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவேண்டும். தொடர்ந்து கிளறும்போது நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி, விழுது உருண்டு திரண்டு பளபளவென்று அல்வா பதத்தில் வரும் பொழுது முந்திரி ,ஏலப் பொடி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து இறக்கவும். வாசனை ஊரையே கூட்டும். சுவையோ சுவை. சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்போல் அப்படி ஒரு ருசி உள்ள அல்வா இது. குழந்தைகள் இதை அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். செய்து அசத்துங்க.
கத்திரிக்காய் ரசவாங்கி செய்ய தேவையான பொருட்கள்:
பிஞ்சு கத்திரிக்காய் சிறிதாக நறுக்கியது - ஒன்றரை கப்
துவரம் பருப்பு -3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்
வெல்லத்துருவல் -ஒரு டீஸ்பூன்
புளி -ஒரு நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி விதை -ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய்- 4
கருப்பு மிளகு -20
புதிதாக துருவி எடுத்த தேங்காய்- அரை கப்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்,,
கருவேப்பிலை - 1 ஆர்க்கு
நறுக்கிய தனியா -ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, தனியா போன்ற அரைக்க கொடுத்த பொருட்களை போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவல் பொன்னிறமாக வறுபடட்டும்.
இந்தக் கலவையை ஆறவிட்டு அப்படியே மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்கு விழுதாக வரும் வரை அரைத்து கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் இந்த விழுதை போட்டு இதனுடன் கத்திரிக்காய் துண்டங்களையும் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்து நன்றாக வதங்க விடவேண்டும். அதனுடன் புளிச்சாறு, மஞ்சள் தூள், வெல்லம், மற்றும் உப்பையும் சேர்த்து மிதமான தீயில் கத்திரிக்காய் நன்கு வெந்து புளி வாசனை போகும் வரையிலும் கொதிக்க விடவேண்டும்.
பின்னர் மசித்து வைத்திருக்கும் பருப்பையும் சேர்த்து கலந்து நன்றாக கொதித்து வரும்வரை விட்டு அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை சிம்மிலேயே வைத்து ஒரு சிறு வாணலியில் மீதம் இருக்கும் எண்ணையை விட்டு கடுகு, கருவேப்பிலையை தாளித்து கத்திரிக்காய் ரசாங்கியில் கொட்டி கலந்து, தனியாவை தூவி இறக்கவும். இந்த ரசவாங்கியை சாதத்துடன் கலந்து சாப்பிட நல்ல ருசியாக இருக்கும்.