குளு குளு பானங்கள்!

குளு குளு பானங்கள்!

நன்னாரி லெமன் சர்பத்

தேவை: நன்னாரி வேர் – 5 துண்டுகள், ஜீனி – 3 மேசைக்கரண்டி, எலுமிச்சம் பழம் – 1, தண்ணீர் தேவைக்கு.

செய்முறை: நன்னாரி வேர் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். ஐந்து நிமிடங்கள் கொதித்ததும், வேரின் சத்துக்கள் தண்ணீரில் இறங்கி, நிறம் மாறி இருக்கும். அப்போது எடுத்து வடிகட்டவும். ஆறியதும் இதனுடன் சர்க்கரை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான தண்ணீர் கலந்து பரிமாறவும். நன்னாரி வேர் உடற்சூட்டைத் தணிக்கும்.

வெங்காய மோர்

தேவை: புளித்த தயிர் – 1 கப், சின்ன வெங்காயம் – 6, பச்சை மிளகாய் – 1, மல்லித்தழை, கொஞ்சம், சீரகத்தூள் – ½ டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை: பச்சை மிளகாயுடன் தோலுரித்த வெங்காயத்தைச் சேர்த்து அரையுங்கள். அதனுடன் தயிர், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டவும். அதில் சீரகத்தூளை போட்டு, நறுக்கிய மல்லித் தழையைத் தூவிப் பரிமாறுங்கள். வெயில் காலத்திற்கு அருந்த அருமையான பானம்.

ரோஜா சர்பத்

தேவை: ரோஜா இதழ்கள் – ½ கப், சர்க்கரை – ¼ கப், ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை, எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன், மாதுளம் பழச்சாறு – ½ கப்.

செய்முறை: ரோஜா இதழ்களுடன் கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி, மாதுளைச்சாறு, எலுமிச்சைச்சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

மாம்பழ மில்க் ஷேக்

தேவை: கனிந்த மாம்பழம் – 1, சர்க்கரை -1 கப், பால் – ¼ லிட்டர்,  வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்பூன்.

செய்முறை: மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். அத்துடன் பால், சர்க்கரை, ஐஸ்கிரீம் சேர்த்து நைஸாக அரைக்க வேண்டும். தேவையான அளவு ஐஸ் வாட்டர் கலந்து நுரை பொங்க அடித்துப் பரிமாறவும்.

ஆப்பிள் கீர்

தேவை: ஆப்பிள் – 1, பால் – 2 கப், சர்க்கரை – 2 ஸ்பூன், அலங்கரிக்க: வெள்ளரி விதை, பாதி கப், பாதாம் – 3, பிஸ்தா – 3.

செய்முறை: ஆப்பிளைத் துருவவும். பாலை நன்கு சுண்டக் காய்ச்சி அதில் சர்க்கரை, துருவிய ஆப்பிள் போட்டு அரைக்கவும். பின் வெள்ளரி விதை, பாதாம், பிஸ்தா சேர்த்து ஃப்ரிஜில் வைத்து பரிமாறவும்.

பீட்ரூட் ஜூஸ்

தேவை: பீட்ரூட் – 100 கிராம், பார்லி – 1 கைப்பிடி, சர்க்கரை – 1 கப், தண்ணீர் – 1 லிட்டர், புதினா – சிறிதளவு, எலுமிச்சம் பழம் – 1.

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி துருவி ½ லிட்டர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அடித்து சாறு எடுத்துக்கொள்ளவும். பார்லியை பொடி பண்ணி ½ லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து வடித்து தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். பீட்ரூட் சாறுடன் பார்லி தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். சர்க்கரை, எலுமிச்சம் பழம் சாறு, புதினா சேர்த்து ஆறியதும் பரிமாறவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற சூப்பர் பானம்.

கூல் டொமேட்டோ குக்கூம்பர்

தேவை: நாட்டுத் தக்காளி – 4, வெள்ளரிக்காய் – 1(சிறியது), மிளகுத் தூள், உப்பு – தேவைக்கு, புதினா இலைகள் – சிறிதளவு.

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் சீவித் துருவவும். வடிகட்டிய தக்காளி ஜூஸில் மிளகு, உப்புத் தூல் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர வைத்த ஜூஸில் வெள்ளரித் துருவல் போட்டு கலக்கிவிட்டு, மேலே பொடியாக நறுக்கிய புதினா இலைகளைத் தூவிப் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com