இட்லி மாவு புளிக்காம இருக்க இதை பண்ணாலே போதும்!
இட்லிக்கு மாவு அரைத்து வைத்தால் இரண்டு மூன்று நாட்கள் தான் புளிக்காமல் இருக்கும். பிறகு புளித்துவிடும். இது இல்லத்தரசிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். அதுவும் ஃபிரிட்ஜ் இல்லாதவர்களாக இருந்தால் இன்னும் சிரமம்தான்.
இனி மாவு புளிக்கும் என்ற கவலையே இல்லை. இட்லி மாவு ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் அப்படியே பிரெஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
• முதலில் மாவு ஆட்டும் கிரைண்டரை நன்றாக கழுவ வேண்டும். நீங்கள் கடைசியாக ஆட்டி வைத்த அந்த மாவின் புளிப்பு தன்மை அப்படியே இருக்கும். அதனால் தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவ வேண்டும்.
• இட்லிக்கு மாவு அரைக்கும்போது அரிசியை 3 லிருந்து 4 மணி நேரம் வரை மட்டுமே ஊற வைக்க வேண்டும். அதிக நேரம் ஊறக் கூடாது. சிலர் இரவு முழுவதும் ஊற வைத்துவிடுவார்கள். காலையில் மாவை அரைப்பார்கள். அப்படி செய்தால் மாவு விரைவில் புளித்துவிட அதிக வாய்ப்புள்ளது.
• ஊளுந்தை இட்லிக்கு ஊற வைக்கும்போது 1 மணி நேரம் மட்டுமே ஊற வைக்க வேண்டும்.
• நீண்ட நேரமாக மாவை ஆட்டி கொண்டிருக்கக் கூடாது. உளுந்தை 20 லிருந்து 25 நிமிடத்திற்குள் ஆட்டி அது பொங்கிவரும்போது எடுத்துவிட வேண்டும். அரிசியையும் நீண்ட நேரம் கிரைண்டரில் ஓட விடக்கூடாது.
• முக்கியமான விஷயம் , உளுந்தையும் அரிசியையும் தனித் தனியாகத்தான் கிரைண்டரில் அரைக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்கக் கூடாது.
• உளுந்து மாவு அரிசி மாவு இரண்டையும் தனி தனி டப்பாவில் எடுத்து வைக்க வேண்டும். முக்கியமாக கை படாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
• இரண்டு மாவையும் கையை போட்டு கரைக்கக் கூடாது. ஏனெனில், கையைப் போட்டு கரைக்கும் போது, கை சூடு பட்டு மாவு சீக்கிரம் புளித்து விடும் வாய்ப்பு உள்ளது. அதனால் ஒரு கரண்டியை வைத்து நன்கு கலக்கிவிட வேண்டும்.
• தென்மாவட்டங்களில் இன்றும் ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள் ஆட்டிய மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேலே மாவு பாத்திரத்தை வைப்பார்கள். அப்படி செய்தால் சீக்கிரமாக புளிக்காது.
• இட்லி மாவுக்கு மேல் வாழையிலையை வைத்து மூடி விட்டால் இரண்டு நாளைக்கு கூட மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.
• முக்கியமாக உப்பு போட்டு கரைக்கக் கூடாது. உப்பு போடாமல் மூடி வைத்துவிட்டால் குறைவாகவே மாவு புளித்து வரும்.
• இரண்டு வெற்றிலையை காம்புடன் பாத்திரத்தின் அடியில் வைத்து அதற்கு மேல் இட்லி மாவை ஊற்றி வைத்தாலும் இரண்டு நாளைக்கு அப்படியே புதிய மாவு மாதிரி புளிக்காமல் இருக்கும்.