என்னதான் நம் தமிழகத்தின் உணவுகள் சிறப்புடன் இருந்தாலும் மற்ற மாநிலத்தின் ஸ்பெஷல்களின் வித்தியாசமான ருசி நம்மைக் கவரும். அந்த வகையில் இரண்டு பிரபலமான ஆவியில் வேகவைத்த சத்தான ரெசிபிக்கள் இதோ.
கர்நாடக மாநிலத்தின் மங்களூர் ஸ்பெஷலான கடுபு செய்முறை இங்கு.
கடுபு
தேவை:
அரிசி மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
வெல்லம் - ஒன்றே கால் கப்
தேங்காய் துருவல் - முக்கால் கப்
ஏலக்காய் தூள் - கால் ஸ்பூன் வாழைப்பழம்- 3
நெய் - அரை ஸ்பூன்
தேன் - சிறிது
செய்முறை:
வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ளவும். துருவிய வெல்லத்துடன் சிறிது நீரூற்றி சூடாகி வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டி தூசு தும்பு நீக்கவும். அந்த வெல்லக்கரைசலுடன் சலித்த அரிசி மாவு, கோதுமை மாவு , தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். இது கெட்டியான இட்லி மாவு பதத்தில் இருக்கவேண்டும் தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இப்போது கடுபுக்கான மாவு ரெடி. சிறிதுநேரம் கழித்து இந்த கலவையை தேவைப்படும் அளவிலான கிண்ணங்களில் நெய் தடவி அதில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவும். வெந்ததும் வேறு ஒரு தட்டில் தலைகீழாக கவிழ்த்தால் கடுபு வந்துவிடும். இதன் மேல் விரும்பினால் தேன் தடவி பரிமாறலாம். இனிப்பு தேவை இல்லை எனில் தேனை தவிர்த்தும் பரிமாறலாம். இது குழந்தைகள் விரும்பும் மிகவும் சத்தான ஒரு உணவாக உள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஸ்பெஷலான டோக்ளாவில் ஒரு வகை இங்கு.
ரவா பாலக் டோக்ளா
தேவை:
வெள்ளை ரவை - 1 கப்
சற்று புளித்த தயிர் - 1 கப்
நறுக்கிய பாலக்கீரை - 1 கப்
பச்சை மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - தாளிக்க
தேங்காய் துருவல்- 1 ஸ்பூன்
சர்க்கரை -சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சுட வைத்த வெந்நீரில் நறுக்கிய பாலக்கீரையை போட்டு ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து நீரை வடிக்கவும். வடித்த கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த ரவை, தயிர், தேவையான உப்பு, அரைத்த பாலக்கீரை அனைத்தையும் சேர்த்து கரண்டி வைத்து நன்கு கலக்கவும். ஒரு குழிவான தட்டில் எண்ணெய் தடவி பாலக் ரவை கலவையை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். டோக்ளா ரெடி. பின் அடுப்பில் தாளிக்கும் கரண்டியில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து வெந்த டோக்ளா மேல் ஊற்றி மேலே தேங்காய் துருவலையும் சேர்க்கவும். சிறிது சர்க்கரையுடன் ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து டோக்ளாவில் தெளிக்கவும். இது ஆறிய பின் துண்டுகள் போட்டு பரிமாறவும். இது ருசியில் வித்தியாசமான செய்வதற்கு எளிதான சத்தான உணவு வகை.