கேரளாவில் மிகவும் பிரபலமான பழ வகைகளில் நேந்திரம் பழமும் ஒன்று. அங்கே இந்த வாழைப்பழத்தை பயன்படுத்தி சிப்ஸ் செய்வது உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த வாழைப்பழத்தை பயன்படுத்தி அங்கே செய்யப்படும் மற்றொரு பிரபலமான உணவு நேந்திர வாழைப்பழ போண்டா. இது கேரளாவில் மிகவும் பிரபலமானது எனலாம். கோதுமை மாவு, சக்கரை, வாழைப்பழம் சேர்த்து செய்யப்படும் இந்த போண்டாவின் சுவை அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
நேந்திர வாழைப்பழம் - 1
கோதுமை - 1 கப்
சர்க்கரை - ½ கப்
ஏலக்காய் - 2
ரவை - ¼ கப்
சோடா உப்பு - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெள்ளை சர்க்கரை, ஏலக்காய், வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் கோதுமைமாவு மற்றும் ரவை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அடுத்ததாக உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நன்றாகக் கலக்கவும். பின்னர் மாவு இளகி வந்ததும், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
இந்த போண்டா மாவு கலவையை 15 நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும். பின்னர் அடுப்பில் கடாய் ஒன்று வைத்து அதில் போண்டாவை பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடேறியதும் போண்டா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போடவும். போண்டா நன்றாக வெந்து பொன் நிறத்திற்கு வந்ததும், எண்ணெயிலிருந்து எடுத்து விட வேண்டும்.
இப்படி செய்தால் கேரளா வாழைப்பழம் போண்டா அதிக சுவையுடன் இருக்கும். இதை உளுந்து மாவு, அரிசி மாவு, மைதா மாவு போன்றவற்றைப் பயன்படுத்தியும் செய்யலாம்.