
முட்டை சேர்க்காத சாக்லேட், கேக் செய்ய சரியான சதவிகிதம் என்ன? ஒவ்வொரு தடவையும், உப்பி இருக்கும் கேக் வெந்திருக்கிறதா என்று சரிபார்க்க கத்தியால் குத்திப் பார்த்தால் அமுங்கி விடுகிறது. இது எதனால்?
முட்டை சேர்த்த கேக்கிற்கும், முட்டை சேர்க்காத கேக்கிற்கும் கலக்கும் முறையில் இருந்து அளவு வரை எல்லாமே வித்தியாசப்படும். கத்தியால் குத்தினால் அமுங்கி விடுகிறது என்று எழுதியிருந்தீர்கள். நல்ல வாசனை வந்த பிறகு கேக்கின் மேலே நல்ல நிறம் வந்த பிறகே குத்திப் பார்க்க வேண்டும்.
சாக்லேட் கேக் என்பதால் சரியாக முழுவதும் வேகாதபோதே மேல் நிறம் தெரியாததால் குத்திப் பார்த்திருப்பீர்கள். அதனால் அமுங்கிவிடும். மாவு தளர்த்தியாக இருந்தாலும் அமுங்கி விடும். மேலும் குத்திப் பார்ப்பதற்கு கத்திக்குப் பதில் ஒரு குச்சியை உபயோகப்படுத்தினால் நலம்.
கீழே கொடுத்திருக்கும் செய்முறைப்படி செய்து பார்க்கவும்.
1 கப் மைதா மாவுடன் (120 கிராம்) 1 டீஸ்பூன் பேகிங் பவுடர், ¼ டீஸ்பூன் சமையல் சோடா, 1 சிட்டிகை உப்பு, 1½ டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்து இரண்டு முறை சலிக்கவும். 60 கிராம் வெண்ணெயுடன் 90 கிராம் பொடித்த சர்க்கரை (¾ கப்) சேர்த்து ஒரு உலர்ந்த கிண்ணத்தில் நன்றாகக் குழைக்கவும். ¾ கப் (150 மி.லி.) பாலை இளம்சூடாக்கி வைத்துக்கொள்ளவும். குழைத்த வெண்ணெயுடன் சலித்த பொருட்கள் மற்றும் சூடான பாலை மாற்றி, மாற்றி சேர்த்து ஒரே பக்கமாக கலந்துவிடவும்.
அதிக நேரம் கலந்து விடவேண்டாம். நன்றாகக் கலந்துகொள்ளும்வரை குழைத்தால் போதும். வெண்ணெய் தடவிய பேகிங் பாத்திரத்திற்கு மாற்றி முன்பே சூடாக்கிய ஓவனில் வைத்து 'பேக்' செய்யவும். சரியான அளவுகள் முக்கியம். அப்போதுதான் நன்றாக வரும்.