
கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே சாதத்திற்கு எப்போதும் குழம்பு வைத்து சாப்பிடும் நாம், ஒருமுறை வித்தியாசமாக கொத்தமல்லி தொக்கு செய்து சாப்பிட்டால், சுவையும் நன்றாக இருக்கும், நமது ஆரோக்கியமும் மேம்படும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் பல உடல் உபாதைகளில் இருந்து நம்மைக் காக்கிறது. கொத்தமல்லி தழையில் நிறைந்துள்ள விட்டமின் சி சத்து, நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
எனவே இந்த பதிவில் கொத்தமல்லி பயன்படுத்தி எப்படி தொக்கு செய்யலாம் எனப் பார்க்கலாம். இதை சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி தோசையுடன் கூட சாப்பிட சுவையாக இருக்கும். இதை வாரம் ஒரு முறையாவது உணவுடன் சேர்த்துக் கொண்டால், முடி உதிர்வு பிரச்சனை, ரத்தசோகை போன்ற அனைத்தும் சரியாகிவிடும்.
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லித் தழை - 1 கட்டு
பூண்டு - 5 பற்கள்
வரமிளகாய் - 5
புளி - சிறிதளவு
கடலைப்பருப்பு - ½ கப்
உளுத்தம் பருப்பு - ½ கப்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் கொத்தமல்லி கட்டை நன்கு கழுவி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊத்தி நறுக்கிய கொத்தமல்லியை போட்டு வதக்க வேண்டும்.
கொத்தமல்லி நன்கு வதங்கியதும் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வரமிளகாயை வறுத்துக் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல புளியையும் கடாயில் போட்டு பெருக்காயம் சேர்த்து பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மல்லித்தழைகளை தவிர்த்து, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம் போன்ற எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு, இத்துடன் பூண்டு மற்றும் உப்பையும் சேர்த்து தண்ணீர் எதுவும் இன்றி கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
இறுதியாக கொத்தமல்லி தழைகளை அதில் போட்டு ஒரு முறை அரைத்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி தொக்கு தயார். இதை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து, தேவைப்படும்போது சாதத்துடனோ அல்லது இட்லி தோசையுடனோ சாப்பிடலாம்.