

கம்பு கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
கம்பு – 2 டம்ளர்
பச்சரிசி / இட்லி அரிசி – 1 டம்ளர்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 6
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கம்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தண்ணீர் வடித்த கம்பை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியைக் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் அரைத்த கம்பு மற்றும் அரிசி மாவை சேர்த்து கிளறி, தேவையான உப்பு சேர்த்து மேலும் நன்றாக கிளறவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்புமா பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் கொழுக்கட்டைகளாக பிடித்து ஸ்டீமர் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைக்கவும். கம்பு கொழுக்கட்டை — வாழைப்பழம் மற்றும் கரும்புச் சர்க்கரை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
கம்பு பணியாரம்
தேவையான பொருட்கள்:
கம்பு – 2 கப்
பச்சரிசி – 1 கப்
உளுந்து – 1 கப்
(மேலுள்ளவற்றை சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து புளிக்க வைத்த மாவு – 2 கப்)
பெரிய வெங்காயம் – 2 Nos
பச்சை மிளகாய் – 4 Nos
துருவிய கேரட் – 1 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கவும். நறுக்கிய பொருட்களுடன் துருவிய கேரட்டை சேர்த்து, உப்புடன் நன்கு பிசையவும்.
இதனை மாவில் சேர்த்து நன்கு கலக்கி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கலந்துகொள்ளவும். பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி, முறுகலாக பணியாரம் சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.