இன்னைக்கு கர்நாடகாவில் மிகவும் பிரபலமான போண்டா சூப் மற்றும் பிரியாணி கத்தரிக்காய் ரெசிபிக்களை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு-1கப்.
ஜீரகாம்-1/2 தேக்கரண்டி.
இஞ்சி-1 துண்டு.
பச்சை மிளகாய்-2
கருவேப்பிலை-சிறிதளவு.
மல்லிதூள்-1/2 தேக்கரண்டி.
ஜீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.
மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி.
தேங்காய்-1/4 மூடி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
தக்காளி-1
தேங்காய் பால்-1கப்.
கொத்தமல்லி- சிறிதளவு.
எழுமிச்சை ஜூஸ்-1/2 மூடி.
எண்ணெய்- 4 தேக்கரண்டி.
போண்டி செய்வதற்கு,
உளுந்து-1கப்.
இடிச்ச மிளகுத்தூள்-1/2 தேக்கரண்டி.
ஜீரகம்-1/2 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்முறை விளக்கம்:
முதலில் 1 கப் பாசிப்பருப்பை நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு குக்கரில் தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது கடாயில் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் ½ தேக்கரண்டி ஜீரகம், இஞ்சி 1 துண்டு சிறிதாக வெட்டியது, பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கியது 2, கருவேப்பிலை சிறிதளவு, ½ தேக்கரண்டி மல்லித்தூள், ½ தேக்கரண்டி ஜீரகத்தூள், ¼ மஞ்சள்தூள், ¼ தேக்கரண்டி பெருங்காயத்தூள் போட்டு நன்றாக கலந்து விட்டு அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்துவிட்டு ½ தேக்கரண்டி உப்பு, ¼ மூடி தேங்காய் துருவியது சேர்த்து கலந்துவிடவும். இப்போது வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பையும் இத்துடன் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இப்போது கொதி வந்ததும் 1 கப் தேங்காய் பால் சேர்த்து கிண்டிவிடவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு, எழுமிச் ஜூஸ் ½ மூடி சேர்த்து இறக்கினால் சூப் ரெடி.
இப்போது ஊறவைத்த உளுந்து 1 கப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று தளர்வாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் இடிச்ச மிளகு ½ தேக்கரண்டி, ஜீரகம் ½ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து விட்டு எண்ணெய்யை நன்றாக கொதிக்க விட்டு அதில் சிறிது சிறிதாக போண்டா மாவை கிள்ளிப் போட்டு நன்றாக பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்துவிடவும்.
இப்போது போண்டாவை ஒரு பவுலில் போட்டுவிட்டு அதில் தயார் செய்து வைத்திருக்கும் சூப்பை நன்றாக போண்டா மூழ்கும் அளவு ஊற்றி பரிமாறவும். அவ்வளவுதான். சுவையான போண்டா சூப் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ஒருமுறை முயற்சித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்க.
பிரியாணி கத்தரிக்காய் செய்ய தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்-1/4 கிலோ.
நல்லெண்ணை-50ml.
வெந்தயம்-1/4 தேக்கரண்டி.
கடுகு-1/4 தேக்கரண்டி.
மிளகு-1/4 தேக்கரண்டி.
ஜீரகம்-1/4 தேக்கரண்டி.
வெங்காயம்-1
கருவேப்பிலை-சிறிதளவு.
பச்சை மிளகாய்-4
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2 தேக்கரண்டி.
புளி- நெல்லிக்காய் அளவு.
தக்காளி-1
வறுத்த எள்-1 தேக்கரண்டி.
வறுத்த வேர்க்கடலை-1
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1/2 தேக்கரண்டி.
உப்பு- ½ தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
பிரியாணி கத்தரிக்காய் செய்முறை விளக்கம்:
முதலில் கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ¼ கிலோ நறுக்கி வைத்த கத்தரிக்காயை நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். இப்போது அதே கடாயில் 50ml நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். அதில் வெந்தயம் ¼ தேக்கரண்டி,கடுகு ¼ தேக்கரண்டி, மிளகு ¼ தேக்கண்டி, ஜீரகம் ¼ தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் 4 சேர்த்து நன்றாக வதக்கி விடவும். இப்போது அதில் ½ தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தக்காளி பொடியாக நறுக்கியது 1 சேர்த்து வதக்கவும்.
இப்போது மிக்ஸியில் 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை, 1 தேக்கரண்டி வறுத்த எள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி மிளகாய்தூள், மல்லித்தூள் ½ தேக்கண்டி, உப்பு ½ தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிண்டிவிடவும். இப்போது வதக்கி வைத்திருக்கும் கத்தரியை இதில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து அதையும் இதில் ஊற்றிவிடவும்.
தண்ணீர் 1 கப் ஊற்றி கத்தரியை வேகவிடவும். இப்போது இந்த கலவை கொதிக்க தொடங்கியதும், அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை இத்துடன் சேர்த்து கிண்டிவிடவும். இப்போது தண்ணீர் சிறிது சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும் எண்ணெய் நன்றாக பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். அவ்வளவு தான் சுவையான பிரியாணி கத்தரிக்காய் தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லுங்க.