பாரம்பரிய பொங்கடம் வித் தக்காளி கொத்சு செய்யலாம் வாங்க!
இன்றைக்கு நம் பாட்டிக்காலத்து பாரம்பரிய உணவான பொங்கடம் மற்றும் சுவையான தக்காளி கொத்சு ரெசிபிஸ் சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பொங்கடம் செய்ய தேவையான பொருட்கள்;
இட்லி அரிசி-2 கப்.
கடலைப்பருப்பு-3/4கப்.
உளுந்து-1 கைப்பிடி.
வரமிளகாய்-4
தேங்காய்-1 கப்.
சீரகம்-1தேக்கரண்டி.
இஞ்சி-1 துண்டு.
உப்பு- தேவையான அளவு.
தாளிக்க,
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
கருவேப்பிலை- சிறிதளவு.
பெருங்காயத்தூள்- சிறிதளவு.
பொங்கடம் செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் இட்லி அரிசியை அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ¾ கப் கடலைப்பருப்பு, உளுந்து 1 கைப்பிடி சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
இப்போது மிக்ஸியில் வரமிளகாய் 4, இஞ்சி 1 துண்டு, தேங்காய்- 1கப், சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஊற வைத்த அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு இதையும் மாவுடன் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்துக் கலந்துவிட்டுக் கொள்ளுங்கள்.
இப்போது கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மாவு 2 கரண்டி ஊற்றி மூடிப்போட்டு வேகவிடவும். இப்போது தோசையை திருப்பி போட்டு மூடிப்போட்டு 2 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். வெளியிலே முறுவலாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும் பாரம்பரியமான பொங்கடத்தை நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
தக்காளி கோத்சு செய்ய தேவையான பொருட்கள்;
தக்காளி-10
உளுந்து-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
தனியா-1 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
வெந்தயம்-1/4 தேக்கரண்டி.
வரமிளகாய்-6
எண்ணெய்-3 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
கருவேப்பிலை- சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
கொத்தமல்லி- சிறிதளவு.
தக்காளி கோத்சு செய்முறை விளக்கம்;
முதலில் நறுக்கிய 10 தக்காளியை குக்கரில் சேர்த்து அத்துடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
ஒரு ஃபேனில் உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி, தனியா 1 தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, வெந்தயம் ¼ தேக்கரண்டி, வரமிளகாய் 6 ஆகியவற்றை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது இதை நன்றாக அரைத்து பவுடராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது தக்காளியின் மீதிருக்கும் தோலை எடுத்துவிட்டு அதையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துவிட்டு அதில் நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இப்போது இதில் அரைத்த தக்காளி, 1 கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் அரைத்த மசாலா 2 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு இதில் தேவையான அளவு உப்பு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். சுவையான தக்காளி கோத்சு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.