மைதா பரோட்டா செய்வதற்கு சற்று பொறுமை அவசியம். ஆனால் வீட்டில் செய்து சாப்பிடும் பொழுது அதை சாப்பிடுவர்களுக்கு அலாதி ஆனந்தம் உண்டாகும். செய்திருக்கும் பரோட்டா நன்றாக இருந்தால் வீட்டில் செய்ததா இது என்று விரும்பி சாப்பிடுவார்கள். அடிக்கடி செய்ய முடியாது என்றாலும், எப்பொழுதாவது நாம் செய்து சாப்பிடலாம். அதன் செய்முறை விளக்கம் இதோ:
மைதா பரோட்டா:
தேவையான பொருட்கள்:
நன்றாக சலித்த மைதா மாவு- 700 கிராம்
வெண்ணெய்- இரண்டு மேஜை கரண்டி
தயிர்-1 மேஜைக் கரண்டி
உப்பு -ஒரு டீஸ்பூன்
சர்க்கரை- ஒரு டீஸ்பூன்
சமையல் எண்ணெய்- 400 மில்லி
செய்முறை:
மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வெண்ணெய், தயிர், சர்க்கரை, உப்பு இவற்றை நன்கு கலந்து பின் தண்ணீர்விட்டு ஒன்று சேர பிசைந்து கொள்ளவும். பின்னர் உருண்டைகளை சப்பாத்தி உருண்டைகளை விட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு உருண்டைகளின் மீது எண்ணெய் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
மாவு உருண்டைகளை எண்ணெய் தடவிய பெரிய சப்பாத்தி பலகை அல்லது சுத்தமான கிச்சன் மேடையில் வைத்து மெல்லியதாக விரிக்கவும். ஒரு அடி நீளம் விரித்து மெல்லிய துணி போன்று இருக்கும் மாவை சேலை கொசுவம் மடிப்பது போல் குட்டிச் சுருக்கங்கள் செய்து அப்படியே இருபுறமும் சுருட்டி கொண்டு வந்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து விடவும். இவ்வாறு புரோட்டா இட்ட பின் சப்பாத்தி தவாவை சுட வைத்து, புரோட்டா சுருக்கிய உருண்டைகளை சுருக்கம் கலையாமல் தேய்த்து இடவும். சப்பாத்தி தவாவில் தாராளமாக எண்ணெய்விட்டு புரோட்டாவை இருபுறமும் மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும். சிறிது ஆறவிட்டு கையால் லேசாக நொறுக்குவதுபோல் பிசைந்தால் லேயர் லேயராக புரோட்டா மிகவும் மென்மையாக வரும்.
அவற்றுடன் பன்னீர் குருமா, வெஜிடபிள் குருமா, உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி குருமா போன்றவற்றில் ஒன்றை சேர்த்து சாப்பிட்டால் நல்ல ருசி அள்ளும்.
வெஜிடபிள் குருமா:
செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் கேப்ஸிகம் எல்லாமாக சேர்ந்து அரிந்தது- இரண்டு கப் பெரிய வெங்காயம் நீளமாக அறிந்தது- இரண்டு, பச்சை மிளகாய் நீளமாக அரிந்தது- ஐந்து
அரைக்க:
தேங்காய் துருவல்- முக்கால் கப்
முந்திரிப் பருப்பு- 10
வறுத்த சோம்பு- ஒரு டீஸ்பூன்
வறுத்த கசகசா- அரை டீஸ்பூன்
வறுத்தமல்லி- ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை -ஒரு ஆர்க்கு
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
தாளிக்க: சோம்பு , பிரிஞ்சி இலை
பட்டை சிறிய துண்டு
மல்லித்தழை பொடியாக நறுக்கியது -ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை:
அரைக்க கொடுத்த பொருட்களை நன்றாக அரைத்து எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காயவிட்டு தாளிக்க கொடுத்ததை தாளித்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகளை சேர்த்து மஞ்சள்தூள் போட்டு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேகவிடவும். காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த மசாலாவை கரைத்து விட்டு, ஒரு கொதிவிடவும். கொதித்தவுடன் மல்லித்தழை தூவி மூடி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். வாசமான சுவை நிறைந்த வெஜிடபிள் குருமா ரெடி. பரோட்டா, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, இடியாப்பம் என்று எதனோடும் ஜோடி சேரும் இது.