
திடீர் விருந்தினர் வருகையின்போதோ – அல்லது ஆபீஸுக்கோ, குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு உணவு கொடுத்தனுப்பவோ – ப்ரஷர் குக்கர் இல்லாமலேயே விரைவில் தயாரித்து அனுப்பக்கூடிய புரதச்சத்து நிறைந்தது இந்த எளிய புலாவ்.
தேவையான பொருட்கள்:
பிரட் – ½, ஸோயா பைட் – 50 கிராம், வெங்காயம் – 100 கிராம் (நீளவாட்டில் மெலிதாக நறுக்கவும்), இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி, கரம் மசாலா பவுடர் – 1 தேக்கரண்டி, தக்காளி – 2, தேங்காய் – ½ மூடி (துருவவும்), எண்ணெய் – 4 மேஜைக் கரண்டி, நெய் – 1 தேக்கரண்டி, கொஞ்சம் காரட் துருவல், புதினா, தேவைக்கு உப்பு.
செய்முறை:
முதலில் ஸோயாபைட் உருண்டைகளை பாக்கெட்டில் கண்டபடி உப்பு கலந்த கொதி நீர் விட்டு ஊற வைத்த, குளிர்ந்த நீரில் அலசி ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். பூவாக உதிர்ந்துவிடும். இதோ போல – பிரட் ஸ்லைஸ்களை துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு சற்று ஓட விட்டால், இதுவும் பூப்போல உதிர்ந்துவிடும்.
அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கி வடித்து எடுத்துக் கொண்டு மீதி எண்ணெயில் – இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், ஸோயாபைட் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு சிறு தீயில் (sim)ல் பச்சை வாசனை போக வதக்கிய பின் உப்பு, காரட் துருவல், சிறு துண்டுகளாக்கிய தக்காளி, புதினா சேர்த்து வதங்கியதும், கரம் மசாலா பவுடர் உதிர்ந்த பிரட் துருவலை போட்டு ஐந்து நிமிடம் நன்றாக எல்லாம் ஒன்றாக சேரும்வரை பிரட்டி, நெய் விட்டு இறக்கப் போவதற்கு முன் தேங்காய் துருவலை தூவி கிளறி இறக்கவும். புலாவ் ரெடி!
அப்புறம் - இருக்கவே இருக்கிறது – வழக்கமான கொத்துமல்லி தழை தூவுவதோ – முந்திரி திராட்சை வறுத்துப் போடுவதோ – வெள்ளரி, குடமிளகாய், தக்காளி வில்லைகளால் அலங்கரிப்பதோ – அதெல்லாம் உங்கள் சாய்ஸ்!
தொட்டுக் கொள்ள தயிர் பச்சடியோ, சட்னியோ போதும்.
குறிப்பு: கைவசம் பச்சை பட்டாணி (நசுக்கவும்), இங்கிலீஷ் காய்கறிகள் ஏதாவது இருந்தால் மிகப் பொடியாக துருவி தக்காளியுடன் வதக்கி சேர்க்கலாம். ஆனால், அதற்கு தகுந்தாற்போல உப்பு, காரம், எண்ணெய் சேர்க்கவும்.