நான் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பீனட் பட்டர் எனக்கு மிகவும் பிடித்ததாகும். இதன் சுவை முற்றிலும் வித்தியாசமாக இனிப்பு, உப்பு என அனைத்தும் கலந்ததாக இருக்கும். இதில் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய கொழுப்பு நிறைந்துள்ளது. ஆனால் பெரும்பாலும் இதை கடையில் வாங்கி சாப்பிடுபவர்கள் தான் ஏராளமாக உள்ளனர்.
கடைகளில் வாங்கப்படும் பீனட் பட்டர் நீண்ட நாள் கெடாதபடி ப்ரிசர்வேட்டிவ் கலந்திருப்பார்கள். அது நம் உடலுக்கு நல்லதல்ல. ஆரோக்கியம் நிறைந்த பீனட் பட்டரை நாம் வீட்டிலேயே எளிதாக செய்ய முடியும். பிரட், சாண்ட்விச் என எதில் இதை தடவி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். சரி வாருங்கள், அதை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 2 கப்
தேன் - 3 ஸ்பூன்
கடலை எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - ¼ ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றாமல் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வறுக்கவும். வறுக்கும்போது வேர்க்கடலை கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
பின்னர் வறுத்த வேர்க்கடலையை ஒரு துணியில் கொட்டி நன்றாக உரசினால் தோல் உரிந்து வந்துவிடும். பிறகு வேர்க்கடலையை நன்கு புடைத்து தோலை தனியாக எடுத்து விடுங்கள். வேர்க்கடலை மிதமான சூட்டில் இருக்கும்போதே அதை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கொஞ்சம் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு கடலை மாவை அரைத்தால் பட்டர் பதத்திற்கு மாறும். இப்போது மிக்ஸியை மேலும் நன்றாக ஓட விட்டு அரைக்க வேண்டும். அடுத்ததாக இதில் உப்பு, எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் அரைத்தால், சூப்பரான ஹோம் மேட் பீனட் பட்டர் தயார்.