மணக்குதே மஹாராஷ்டிரா ஸ்பெஷல்!

மணக்குதே மஹாராஷ்டிரா ஸ்பெஷல்!

பர்லி வாங்கி

தேவையான பொருள்கள்:  பிஞ்சு கத்தரிக்காய் – ½ கிலோ, வறுத்த வேர்க்கடலை – 100 கிராம், தேங்காய் துருவியது – 4, டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித் தழை – சிறிய கட்டு, தனியாப் பொடி – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – தேவையான அளவு, மிளகாயத் தூள், கரம் மசாலாத் தூள் – தலா 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 4 பல், உப்பு- தேவைக்கேற்ப, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், பெருங்காயம் – தாளிக்க.

செய்முறை: கத்தரிக்காயை காம்பு நீக்கி நான்காக பிளந்து நீரில் போட்டு வைக்கவும். மிக்ஸியில் வேர்க்கடலையைப் பொடித்து பின், தேங்காய்த் துருவல், மசாலா முதலிய எல்லாப் பொருட்களையும் கெட்டி சட்னி பதத்தில் அரைக்கவும். இந்த மசாலாவை கத்தரிக்காய்க்குள் விரலால் அழுத்தி அடைக்கவும். மீதமுள்ள மசாலா அப்படியே இருக்கட்டும்.

அகலமான நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெயை விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும். கத்தரிக் காய்களை ஒவ்வொன்றாக அதில் பரவலாக வைத்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து வாணலியை இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு மேலும் கீழும் டாஸ் செய்யவும். மீதமுள்ள மசாலாவை சேர்த்துக் கொஞ்சம் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். தீ மிதமாக இருக்கட்டும். கத்தரிக்காய்கள் நன்றாக வெந்து எண்ணெய் வெளியில் வரும்வரையில் மூடி வைக்கவும். கரண்டியால் கிளற வேண்டாம். பர்லி வாங்கி ரெடி.

தாளிபீட்

மாவு தயார் செய்ய:

தேவையான பொருட்கள்: கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, அரிசி – தலா 250 கிராம், க.பருப்பு, ப.பருப்பு, உ.பருப்பு,  சோயாபீன், ஜவ்வரிசி – தலா 125 கிராம், தனியா – 125 கிராம், சீரகம், ஓமம், வெந்தயம், அவல் – தலா 2 டேபிள் ஸ்பூன்.

ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக  மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இதுதான் தாளிபீட். (பீட் என்றால் மாவு)

செய்முறை: வறுத்த எள் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 2 பல், கொத்துமல்லித்தழை – அரை கட்டு இத்துடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்த விழுதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான மாவுடன் சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

இரண்டு அரை அடி சதுரமான துணியை எடுக்கவும். ஒன்றில் தாள் பீட்டை வைக்கவும். மற்றொன்றை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து சப்பாத்தி மணையில் போடவும். கொஞ்சம் மாவை எடுத்து ஈரத் துணி மேல் சிறிது தண்ணீர் தொட்டு சப்பாத்தியாக கையால் தட்டி, நான்-ஸ்டிக் தவாவில் போடவும்.

ஒரு ஸ்பூனால் சின்னச் சின்ன ஓட்டைகள் போட்டு மூடி வைக்கவும். நன்றாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு எண்ணெயை விடவும். நன்றாக ரோஸ்ட் ஆனதும் சூடாகப் பரிமாறவும்.

கர்டா

தேவையான பொருள்கள்: பச்சை மிளகாய், பூண்டு பல் – தலா 6 எண்ணிக்கை, வறுத்த வேர்க்கடலை – 4 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை: வாணலியில் கொஞ்சம் எண்ணெயைச் சூடாக்கி பூண்டு, பச்சை மிளகாயைப் போட்டு மூடிவிட்டு, ஸ்டவ்வை நிறுத்தி விடுங்கள். மிக்ஸியில் வேர்க் கடலையைப் பொடித்து வாணலியிலுள்ள பூண்டு, பச்சை மிளகாயைப் போட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைக்கவும். கர்டா ரெடி! தாளீபீட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

பாகர்வடி

இது ஒரு பாரம்பரிய மகாராஷ்டிர உணவு. இதைச் செய்வதற்குக் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டாலும் ஒரு மாதம் வரை கெடாது. தேநீருடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

மேல் மாவு செய்வதற்குத் தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 2 கப், மைதா மாவு – 1½ கப், மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன், பெருங்காயம் – ¼ டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

ஸ்டப்பிங் மசாலா செய்ய: சீரகப் பொடி – ½ டேபிள் ஸ்பூன், தனியாப்பொடி – ½ டேபிள் ஸ்பூன், வறுத்துப் பொடித்த கசகசா – 100 கிராம், தேங்காய்த் துருவல் – 200 கிராம், பச்சை மிளகாய் – 3 (விழுதாக்கவும்), துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித் தழை – ¼ கப் (நறுக்கியது), மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி, பெருங்காயம் – தலா ¼ டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

மேற்சொன்ன எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும்.  எண்ணெய் பொரிக்க.

செய்முறை: ஓர் அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, தண்ணீர் தெளித்து பூரிமாவு பதத்துக்குப் பிசையவும். சின்னச் சின்ன பூரிகளாக இட்டு, ஸ்டப்பிங் மசாலாவை வைத்து ரோல் செய்து தட்டில் அடுக்கவும். 20 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.  ஆற வைத்த பிறகு வட்டமாக இரண்டு அங்குலம் அளவில் வெட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பாகர்வடி ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com