'Mango Magic' 7 Recipes!

Mango Recipes
Mango Recipes

1. சேலத்து ஸ்பெஷல் மாங்காய் கறி:

Salem Special Mango Curry
Salem Special Mango CurryImg Credit: Sai Nivi's Kitchen

தேவையானவை:

 • மாங்காய் 1/4 கிலோ 

 • கடலைப்பருப்பு 1 ஸ்பூன்

 • உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

 • சோம்பு 1/2 ஸ்பூன்

 • பட்டை சிறு துண்டு

 • சீரகம் 1/2 ஸ்பூன்

 • மிளகு 1 ஸ்பூன்

 • இஞ்சி  1 துண்டு

 • மிளகாய் 4

 • சின்ன வெங்காயம் 1 கைப்பிடி

 • பெரிய வெங்காயம் 1/2

 • தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

 • தக்காளி 1 

 • தனியா தூள் 1 ஸ்பூன்

 • உப்பு தேவையானது

 • தாளிக்க: கடுகு, கருவேப்பிலைை, நல்லெண்ணெய்

செய்முறை:

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் மூன்றையும் சிவக்க வறுத்து எடுக்கவும். அதே கடாயில் சோம்பு, பட்டை, சீரகம், மிளகு, கருவேப்பிலை சிறிது சேர்த்து வறுத்து கடைசியாக பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

இவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிது கருவேப்பிலை சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். அத்துடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய மாங்காயை சேர்த்து அரை கப் நீர் விட்டு வேக விடவும். முக்கால் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். மிகவும் ருசியான சேலத்து மாங்காய் கறி ரெடி. 

இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

2. மாங்காய் ஜெல்லி:

Mango jelly
Mango jellyImg Credit: Sharmis Passions

தேவையானவை:

 • மாங்காய் 2 

 • சர்க்கரை 200 கிராம் 

 • தண்ணீர் 1 கப்

செய்முறை:

மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வடிகட்டியில் நன்கு வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 

அடி கனமான வாணலியில் 200 கிராம் சர்க்கரை போட்டு அதனுடன் அரை கப் தண்ணீர் விட்டு மாங்காய் சாற்றையும் போட்டு நன்கு கிளறவும். அடுப்பை நிதானமாக எரிய விட்டு சிறிது உப்பு (கால் ஸ்பூன்) சேர்த்து நன்கு கிளறவும். இந்த கலவை நன்கு கெட்டியானதும் அதாவது வாணலியில் ஒட்டாமல் வரும் பதம் வரை கிளறி எடுக்கவும். சிறிதளவு தண்ணீரில் போட்டு கையால் எடுத்துப் பார்க்க அவை நீரில் கரையாமல் வந்தால் சரியான பக்குவத்தில் தயாராகி விட்டது என்று அர்த்தம். அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆறியதும் எந்த வடிவத்தில் வேண்டுமோ அம்மாதிரி வடிவம் உள்ள அச்சில் ஊற்றி ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுக்க சுவையான மாங்காய் ஜெல்லி தயார்.

3. மாங்காய் பச்சடி:

Mango Pachadi
Mango PachadiImg Credit: Raks Kitchen

தேவையானவை:

 • மாங்காய் 1

 • வெல்லம் 1/2 கப்

 • வேப்பம்பூ 2 ஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் 1

 • உப்பு சிறிது

 • பச்சை மிளகாய் 1

 • தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய்

செய்முறை:

அதிகம் புளிப்பில்லாத மாங்காயாக (கிளி மூக்கு மாங்காய் பெஸ்ட்) வாங்கி தோல் சீவி துண்டங்களாக நறுக்கவும். இதனை தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். பொடித்த வெல்லம் அரை கப் சேர்த்து கொதிக்க விட்டு சிறிது கெட்டியானதும் இறக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் 1 கிள்ளிப்போட்டு வேப்பம் பூ 2 ஸ்பூன் சேர்த்து நன்கு வறுத்து மாங்காய் பச்சடியில் கொட்ட மிகவும் ருசியான பச்சடி தயார்.

உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கசப்பு என அறுசுவையும் நிறைந்தது இந்த மாங்காய் பச்சடி.

4. ஆம்சூர் பவுடர்: 

Amchur Powder
Amchur PowderImg Credit: Spice hub of india

தேவையானவை:

 • புளிப்பான மாங்காய் 6 

 • கருப்பு உப்பு 1/2 கப் 

செய்முறை:

மாங்காயை நன்கு தண்ணீரில் கழுவி துடைத்து ஈரம் போக ஆற விடவும். பின்பு அவற்றை விரல் நீள துண்டுகளாக்கி வெயிலில் நாலைந்து நாட்கள் காய விடவும். நன்கு காய்ந்து கைகளால் உடைக்கும் பதம் வரும் வரை காய்ந்ததும் மிக்சியில் போட்டு கருப்பு உப்பு எனப்படும் காலா நமக்கை சேர்த்து நன்கு பொடிக்கவும். இதனை திப்பிகள் ஏதும் இல்லாமல் சலித்து காற்று போகாத டப்பாவில் எடுத்து வைக்க ஒரு வருடமானாலும் கெடாது. தேவைப்படும் சமயம் இதனை சமையலிலும், சாட் ஐட்டங்கள் செய்யும் போதும் உபயோகிக்கலாம். 

5. மாங்காய் ரசம்: 

Mango Rasam
Mango RasamImg Credit: Pavi's kitchen

தேவையானவை:

 • பச்சை மாங்காய் 1 கப்

 • துவரம் பருப்பு 1/4 கப்

 • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

 • பச்சை மிளகாய் 2

 • கொத்தமல்லி சிறிது 

 • இஞ்சி 1 துண்டு

 • பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

 • வெல்லம் சிறு கட்டி 

 • தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் 1

செய்முறை:

துவரம் பருப்பு, மஞ்சள் தூள், மாங்காய் துண்டுகள், கீறிய பச்சை மிளகாய், 2 கப் தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக விடவும். வெந்ததும் நன்கு மசித்து தேவையான அளவு நீர் விட்டு உப்பு, நசுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து பொங்க விடவும். பொங்கி வரும் சமயம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெல்லம் சிறிது சேர்த்து இறக்கவும். வாணலியில் நெய் சிறிது விட்டு கடுகு, கருவேப்பிலை, காய்ந்து மிளகாய் 1 கிள்ளி சேர்த்து கடுகு பொரிந்ததும் தாளித்துக் கொட்டவும். மிகவும் ருசியான, மணமான மாங்காய் ரசம் தயார்.

6. மாங்காய் மசியல்:

Mango Masiyal
Mango MasiyalImg Credit: Yogambal Sundar

தேவையானவை:

 • மாங்காய் துண்டுகள் 1 கப் 

 • துவரம் பருப்பு 1/4 கப் 

 • பச்சை மிளகாய் 2 

 • காய்ந்த மிளகாய் 2 

 • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

 • உப்பு சிறிது

 • பெருங்காயத்தூள்1/2 ஸ்பூன் 

 • பூண்டு 6 பற்கள் 

 • வெல்லம் 1 துண்டு

 • தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா 1 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, நல்லெண்ணெய்

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கடுகு பொரிந்ததும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் விடவும். அதில் நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். மாங்காய் துண்டுகள் நன்கு வெந்ததும் கரண்டியால் மசித்து வெந்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு துண்டு வெல்லமும் போட்டு கொதி வந்ததும் இறக்கவும்.

மிகவும் ருசியான மாங்காய் மசியல் தயார். இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி, புலாவ் போன்றவற்றுக்கும் சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். 

7. தாளிப்பு மாங்காய்: 

Thalippu mango
Thalippu mango

தேவையானவை:

 • மாங்காய் 1 

 • உப்பு சிறிது 

 • மிளகாய் தூள் 2 ஸ்பூன்

 • பெருங்காயத்தூள் 1 ஸ்பூன் 

 • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

 • தாளிக்க: கடுகு, பூண்டு 2 பல், நல்லெண்ணெய்

செய்முறை:

நொடியில் தயாரித்து விடக்கூடிய ஊறுகாய் இது. மாங்காயை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் அனைத்தையும் சேர்த்து வாணலியில் கடுகு, தட்டிய பூண்டு 2 சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்துக் கொட்டி கலந்து விட மிகவும் ருசியான தாளிப்பு மாங்காய் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com