மாங்காய் சாதம், மாங்கொட்டை வத்தல், மாங்காய் வத்தல், ரெசிபிஸ்!

Mango recipes...
Mango recipes...
Published on

மாங்காய் சீசன் முடியப்போகிறது. மாம்பழங்கள் நிறைய வர ஆரம்பித்துவிட்டது. மாங்காய் கிடைக்கும்போதே நிறைய வாங்கி மாங்காய் வத்தல், மாங்கொட்டை வத்தல் என செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். மாங்காய் வத்தலைக் கொண்டு மிளகு குழம்பு காரக்குழம்பு, ஊறுகாய் என்ன செய்யலாம். மாங்கொட்டைகள் அதனுள் இருக்கும் பருப்புகள் மருத்துவகுணம் நிறைந்தவை. வயிற்றுப்போக்கு சீதபேதி வயிற்றுப் பொருமல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை தீர்க்க உதவும்.

மாங்காய் சீசனில் மாங்காய் சாதம் செய்யவில்லை என்றால் எப்படி?

மாங்காய் ஒன்று

உப்பு தேவையானது

பச்சை மிளகாய் 4

வடித்த சாதம் இரண்டு கப்

தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்

தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, கருவேப்பிலை

அதிகம் புளிப்பில்லாத மாங்காயாக எடுத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தோல் நீக்கிய வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து துருவி வைத்துள்ள மாங்காயை போடவும். தேவையான அளவு பொடித்த உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் கலந்து அடுப்பை நிதானமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கியதும் வடித்த சாதம் இரண்டு கப் கலந்து கிளற மிகவும் ருசியான மாங்காய் சாதம் தயார். இதற்கு தொட்டுக் கொள்ள அரிசி வடாம்,ஜவ்வரிசி வத்தல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

மாங்கொட்டை வற்றல் போடும் முறை:

புளிப்பு மாங்காய் 6 

கல் உப்பு  தேவையானது

மஞ்சள் தூள் 2 ஸ்பூன்

புளிப்பு மாங்காய் ஆறு எடுத்து நன்கு அலம்பி துடைத்து இரண்டு கன்னப்பகுதிகளையும் முழுதாக வெட்டாமல் சிறிது மாங்காயுடன் ஒட்டி இருக்கும்படி நறுக்கி கல் உப்பை இரண்டு பகுதிகளிலும் போட்டு ஒரு சிறு நூல் கொண்டு கட்டி விடவும். இதனை நான்கு நாட்கள் ஊற விட்டு விடவும். பிறகு நூலை அகற்றிவிட்டு வெயிலில் நன்கு காய விடவும். மொறுமொறுப்பாக காய 7 நாட்கள் ஆகும். பிறகு இதன் கன்னப் பகுதிகளை தனியாக எடுத்து மாங்காய் வத்தலாக உபயோகிக்கலாம். நடுவில் இருக்கும் கொட்டை பகுதியை இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உள்ளே பருப்புடன் இருக்கும் இந்த மாங்கொட்டை மருத்துவ குணம் நிறைந்தது. இதனை காற்று புகாத டப்பாவில் ஈரம் படாதவாறு வைத்திருக்க ஒரு வருடம் வரை சமையலில் உபயோகிக்கலாம்.  உள்ளே பருப்புடன் கூடிய மாங்கொட்டையை மூன்றாக நறுக்கி மாங்கொட்டைக் குழம்பு செய்ய பயன்படுத்தலாம்.

மாங்கொட்டையில் கார்போஹைட்ரேட், புரோட்டின், விட்டமின் ஈ, விட்டமின் பி6, நார் சத்துக்கள், அமினோ அமிலங்கள், நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. எனவே மாங்காய் கொட்டையை தூக்கி எறியாமல் வற்றல் செய்து வைத்துக்கொண்டு சமையலில் உபயோகிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
இந்தக் கலைக்கு இத்தனை சிறப்பா?
Mango recipes...

மாங்காய் வத்தல் போடும் முறை:

மாங்காய் சீசனில் செய்து வைத்துக்கொள்ள ஒரு வருடம் வரை வைத்து உபயோகிக்கலாம்.

புளிப்பு மாங்காய் 4 

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 2 ஸ்பூன்

புளிப்பு மாங்காயாக நான்கு எடுத்து கழுவி ஈரம் போகத் துடைத்து கொட்டையுடன் சேர்த்து துண்டுகளாக்கவும். இதனை ஒருநாள் காற்றாட நிழலில் உலர்த்தி வைக்கவும். அடுத்த நாள் காலை மாங்காய் முங்கும் அளவுக்கு தண்ணீரை அடுப்பில் கொதிக்க விட்டு கொதி வந்ததும் நறுக்கிய மாங்காய்த் துண்டுகளை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் போட்டு உடனே அடுப்பை அணைத்து விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து மாங்காயை வாரி மூங்கில் தட்டு அல்லது தாம்பாளத்தில் வைத்து வெயிலில் நன்கு காய விடவும். உள் ஈரம் போக ஒரு வாரம் ஆகும். இதனை நன்கு காயவைத்து உலர்த்தி காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் சமயம் இந்த வத்தலை உபயோகித்து ஊறுகாய், வத்தக்குழம்பு, ரசம், மிளகு குழம்பு, காரக்குழம்பு என வெரைட்டியாக செய்து அசத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com