Healthy Pachadi recipes.
mango pachadi recipes...Image credit - youtube.com

மாங்காய் பச்சடியும், முருங்கை - கேரட் கூட்டும்!

Published on

மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பது பழமொழி. இதிலிருந்தே மாங்காயின் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இனிப்பு மாங்காய் செய்யும் விதத்தை இப்பதிவில் காண்போம்.

மாங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:

பெரிய மாங்காய்- இரண்டு 

வரமிளகாய் -இரண்டு

பச்சை மிளகாய்- இரண்டு

கறிவேப்பிலை- இரண்டு ஆர்க்கு

வெல்லத் துருவல் -கால் கப்

எண்ணெய், கடுகு- தாளிப்பதற்கு தேவையான அளவு 

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக  நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மிளகாய் கருவேப்பிலை இவைகளையும் சேர்த்து வதக்கவும். நன்றாக சிவந்ததும் மாங்காய் துண்டுகளை போட்டு சிறிது நேரம் வதக்கி சிறிது தண்ணீர் விட்டு உப்பு கலந்து வேகவைக்கவும். நன்றாக வெந்த பின் கரண்டியால் மசித்துவிட்டு தேவையான வெல்லத்துருவலை அதில் சேர்த்து  கிளறி கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும். மாங்காய் துண்டுகள் நன்றாக வெந்த பிறகு வெல்லம் சேர்க்க வேண்டியது அவசியம். இந்த இனிப்பு மாங்காய் பச்சடியில் காரம், புளிப்பு, இனிப்பு, உப்பு போன்ற சுவைகள் நன்றாக கலந்திருப்பதால் அனைவரும் விரும்பி உண்பர். 

மாங்காயை தோலோடு சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் செய்யலாம் . அதில் ஒருவித துவர்ப்பு தன்மையும் கிடைத்துவிடும். அது உடம்புக்கு இன்னும் நல்லது. தோலை சீவ சொல்வதன் காரணம் சிலவற்றில் வாசனை மற்றும் கசப்புடன் சேர்ந்த துவர்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால்தான்.

முருங்கைக்காய்- கேரட் கூட்டு:

செய்ய தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்

சிறு துண்டுகளாக வெட்டிய பெரிய முருங்கைக்காய்- 2

சிறு துண்டுகளாக வெட்டிய கேரட்- இரண்டு

நீளமாக வெட்டிய பெரிய வெங்காயம் -2

நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் -4

தேங்காய் துருவல் -1 கப்

 சீரகம் -ஒரு டீஸ்பூன்

 கருவேப்பிலை- இரண்டு ஆர்க்கு

 உப்பு ,எண்ணெய்- தேவைக்கேற்ப

 கடுகு- தாளிக்க

இதையும் படியுங்கள்:
வீடே மணக்கும்படி சாம்பார், ரசம் வைக்கணுமா இந்த ரகசியத்தை ஃபாலோ பண்ணுங்க!
Healthy Pachadi recipes.

செய்முறை:

தேங்காய் துருவலுடன் சீரகத்தை சேர்த்து நன்றாக அரைத்து, கடைசியில் கறிவேப்பிலையை லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் முருங்கைக்காய்- கேரட்வுடன் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மஞ்சள் தூள் கலந்து நன்றாக வேகவிடவும். வெந்த பிறகு அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை அதில் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். 

இந்த முருங்கைக்காய், கேரட் கூட்டு அசத்தலாக இருக்கும். அனைவரும் விரும்பி உண்பர். அடிக்கடி செய்ய சொல்லியும் கேட்பார்கள்.

logo
Kalki Online
kalkionline.com