

முடக்கத்தான் கீரையின் பயன்கள் ஏராளம். இது மூட்டுவலி, முடக்கு வாதம், மற்றும் நரம்பு தளர்ச்சி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், இது மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை, காது வலி, சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த கீரை சரும நோய்களுக்கும், மாதவிடாய் வலிகளைப் போக்கவும் முடக்கத்தான் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுவதால் உடலில் ஏற்படும் வாதநோய்களை அண்டவிடாது. மூட்டு வலி உள்ளோருக்கு இது வரப்பிரசாதமாகும்.
இந்த முடக்கத்தான் கீரையை எளிய முறையில் பயன்படுத்தி செய்யப்படும் சில ரெசிப்பிகள் இதோ:
முடக்கத்தான் மசாலா தோசை
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை – 1 கப்
இட்லி / தோசை மாவு – 2 கப்
வறுத்த வெள்ளை ரவை – ½ கப்
கடலை மாவு – 1 டீஸ்பூன்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
தக்காளி – 1 (பெரியது)
இஞ்சி – 1 துண்டு
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்
செய்முறை:
முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து, அதனுடன் பூண்டு, தக்காளி, இஞ்சி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் மிளகு, சீரகத்தை லேசாக வறுத்து எடுத்து பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு பொரித்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். மிளகு–சீரகப் பொடியின் பாதியை தூவி கலக்கி இறக்கவும். இட்லி மாவில் நல்லெண்ணெய், அரைத்த முடக்கத்தான் கீரை, ரவை, கடலை மாவு, மீதமுள்ள மிளகு–சீரகப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக் கல்லை காயவைத்து, ஒரு கரண்டி மாவை ஊற்றி பரப்பவும். மேல்புறம் வெந்ததும் ஒரு ஸ்பூன் மசாலாவை பரப்பி நல்லெண்ணெய் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும். தோசை முறுகலாக வெந்ததும் மடக்கி எடுத்து தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
முடக்கத்தான் கீரை துவையல்:
சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, மஞ்சள்தூள், பூண்டு, பச்சை மிளகாய், புளி, உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் நன்கு வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதனை கையால் தொடாமல் பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
முடக்கத்தான் கீரை சூப்:
முடக்கத்தான் கீரையை தண்டு, விதைகளுடன் எடுத்து சுத்தம் செய்து சுருட்டி, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் பாதியாக குறைந்ததும் உப்பு, மிளகு–சீரகப்பொடி சேர்த்து சூடாக பரிமாறவும்.