தெலுங்கானாவில் மஞ்சள், எள், கார மிளகாய் ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யும் உணவுகள் அதிகமாகவே இருக்கும். அதேபோல் ரொட்டி மற்றும் ஊருகாய் ஆகியவற்றையும் அதிகம் காணலாம். தெலுங்கானாவின் பிரபலமான உணவுகள் என்றால் அது பிரியாணி, கராச்சி பிஸ்கட்தான். அந்தவகையில் தெலுங்கானாவின் இன்னும் சில சுவையான உணவு வகைகளைப் பற்றி தெரிந்துக்கொண்டால் தெலுங்கானா பயணத்திற்கு உதவியாக இருக்கும்.
1. சர்வபிந்தி:
சர்வபிந்தி என்பது அரிசி மாவு, பருப்பு, கடலை பருப்பு மற்றும் மிளகாய் ஆகியவற்றை நன்றாக சமைத்து பான் கேக் வடிவில் செய்யப்படும் ஒரு உணவு. சர்வபிந்தியை ஜின்னி அப்பா என்றும் அழைப்பார்கள்.
2. மலிடாலு:
இது மீதமிருக்கும் சப்பாத்தியை அடுத்த நாள் சப்ஜியாக செய்து சாப்பிடும் உணவு. இந்த சப்பாத்தியை சிறிது சிறிதாக நறுக்கி வெல்லம், நட்ஸ் மற்றும் நெய் பயன்படுத்தி அதனை ஒரு உருண்டையாக மாற்றி செய்வார்கள்.
3. சகினாலு:
இது அரிசி மாவு மற்றும் எள் எண்ணெய் பயன்படுத்தி வறுப்பார்கள். எந்த மசாலாப் பொருட்களும் இல்லாமல் செய்யப்படும் இதனை சக்ராந்தி பண்டிகையிலும் திருமண நிகழ்வுகளிலும் அதிகம் செய்வார்கள்.
4. கரிஜாலு:
கஜ்ஜிகாயா என்றழைக்கப்படும் இந்த கரிஜாலு தேங்காய், சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு உணவு வகை. இதனை நன்றாக வறுத்து எடுத்தால் மகாராஷ்திராவின் பிரபல உணவு வகை காராஞ்சி வடிவில் இருக்கும். கரிஜாலு வெளியே மைதா மாவினால் செய்து அதனுள் ஸ்டஃப் வைத்து மடக்கி செய்யப்படும்.
5.பச்சிபுலுசு:
பச்சிபுலுசு தமிழ்நாட்டில் செய்யும் ரசம் போல் தான் இருக்கும். ரசத்தில் பயன்படுத்தும் அனைத்து உணவுப் பொருட்களும் கலந்து பச்சிபுலுசு செய்யப்படும். ஆனால் இது ரசம் செய்வதைவிட எளிதாக இருக்கும்.
6. செகோடிலு:
இது தேநீர் அருந்தும் நேரங்களில் அதனுடன் சேர்த்து சாப்பிடப்படும் ஒரு தின்பண்டம். எள்ளை வருத்து செய்யப்படும் இந்த தின்பண்டம் சாப்பிடுவதற்கு கடலை மிட்டாய் போல கரடு முரடாக இருக்கும்.
7. பொலிலு:
கணேஷ் சதுர்த்தி போன்ற நாட்களில் விசேஷமாக செய்யப்படும் இந்த உணவு வகை வெல்லம், சன்னா பருப்பு, ஏலக்காய் பவுடர், ப்ரெட் மற்றும் நெய் பயன்படுத்தி செய்வார்கள்.
8. குபானி கா மீதா:
உலர்ந்த பாதாம் (Apricots) பாகு மாதிறி ஆகும்வரை நன்றாக சமைப்பார்கள். பின் அதனுடன் வெல்லம், சர்க்கரை, நெய், குங்குமப்பூ ஆகியவை சேர்த்து சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் இதனுடன் ஐஸ் கிரீம் அல்லது மலாய் சேர்த்து சாப்பிடுவதும் உண்டு.
இந்த பதிவில் நான் குறிப்பிட்டுள்ள 8 உணவுகளை, தெலுங்கானா செல்லும் அனைவருமே ஒரு முறையாவது முயற்சிக்க வேண்டும். இவற்றின் சுவை உண்மையிலேயே சூப்பராகவும், தனித்துவமானதாகவும் இருக்கும்.