புத்தாண்டிற்கு புதுப்புது இனிப்புகள்!

ரெசிபி
புத்தாண்டிற்கு புதுப்புது இனிப்புகள்!

‘டபுள் கா மீட்டா…’

னிப்பை பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டா அதற்காக ஹோட்டலில்தான் சென்று சாப்பிட வேண்டும் என்பது இல்லை. அதை வீட்டிலேயே சுவையாகத் தயாரிக்கலாம். இதோ அந்த ரெசிபி…

அடி கனமான வாணலியில் நெய்யை காய வைத்து, ஐந்து பிரட் ஸ்லைஸ்களை அதனுள் போட்டு பொரித்து எடுத்தேன். அரை கப் சர்க்கரையில் அரை கப் தண்ணீரைச் சேர்த்து பாகு வைத்தேன். ஜீராவில் சிறிதளவு  சில துளிகள் வெனிலா எசன்ஸ் சேர்த்தேன். பொரித்த பிரட் துண்டுகளை (முக்கோணமாக கட் செய்த)  சூடான ஜீராவில் போட்டு, லேசாக புரட்டி எடுத்து ஒரு அழகிய ட்ரேயில் அடுக்கி, அதன்மேல் துருவிய பாதாம் ,துருவிய பிஸ்தா, தூவி சிறிதளவு பிரஷ் க்ரீமையும் சேர்த்து பரிமாற... 'டபுள் கா மிட்டா...’ சுவையில் அசத்தும். உங்களைப் பாராட்டு மழையில் நனைய வைக்கும்.

‘வெண்ணை புட்டு’ (வெல்லத்தில் செய்தது) செய்யலாமா?!

வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான இனிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கால் கிலோ புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நைசாக கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் கடலைப்பருப்பை நன்கு வேக வைத்துக்கொள்ள வேண்டும். அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கிலோ வெல்லத்தை பாகாக காய்ச்ச வேண்டும். வெல்லப்பாகில் கால் லிட்டர் பாலை ஊற்றி கொதித்து வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மாவை அதில் கொட்டி நன்கு கிளற வேண்டும். மாவு சற்றே வெந்தவுடன் அதில் வேக வைத்த கடலைப்பருப்பு, மற்றும் சிட்டிகை உப்பு சேர்க்கவும். முழுவதுமாக வெந்தவுடன் அதில் துருவிய தேங்காய், சிட்டிகை ஏலக்காய் பொடி தூவி இறக்கவும். ஒரு பெரிய அகலமான தட்டு எடுத்து அதில் 100 கிராம் வெண்ணெயைத் தடவி கலவையைக் கொட்டி ஆறிய பின் பரிமாற வாயில் போட்டால் கரையும் இந்த வெண்ணெய் புட்டு.

‘இனிப்பு 'பூசணி விதை கீர்’.

ரு கப் பூசணி விதையை ( தோல் நீக்கியது) நான்கு மணி நேரம் ஊற விட்டு பிறகு சொரசொரப்பான தரையில் மெதுவாக தேய்த்து அதன் தோலை நீக்கி நன்கு கழுவி விட்டு  அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் வெள்ளரி விதையையும் சேர்த்து (லேசாக நீர் தெளித்து)நைசாக அரைத்துக் கொண்டு, அரைத்த விழுதை இரண்டு கப் பால், ஒரு கப் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி,10 நிமிடம் கழித்து இறக்க ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கீர் தயாராகிவிடும். (சற்று கெட்டியாக இருக்கும் இந்த கீர்.) என்ன கீர் என்று சொல்ல முடியாத அளவுக்கு சுவையில் பிரமாதமாக இருக்கும். ( எங்கள் வீட்டு விருந்துகளில் தவறாமல் இடம்பெறும் கீர் இது!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com