வெறும் கோதுமை மாவு போதும்.. இன்ஸ்டன்ட் டின்னர் ரெடி!

Night Dinner Recipes in Tamil
Night Dinner Recipes in Tamil
Published on

ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் என்ன சமைப்பது என முடிவு செய்வதே பெரும் பாடாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி சமையல் செய்து வாழ்க்கையே வெறுத்து விட்டது. குறிப்பாக இரவு நேரத்தில் என்ன டின்னர் செய்வது என்பதில் எப்போதும் குழப்பம்தான்” என தினசரி சமையல் சார்ந்து கவலை கொள்ளும் நபரா நீங்கள்?. இனி கவலை வேண்டாம். உங்களிடம் கோதுமை மாவு இருந்தால் போதும் சத்தான சூப்பர் டின்னர் ரெசிபி உடனடியாக செய்துவிடலாம். சரி வாருங்கள் அது எப்படி எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு - 2 கப்

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன் 

சீரகம் - ½ ஸ்பூன் 

கடுகு - ½ ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - 1 சிறு துண்டு

கருவேப்பிலை - ஒரு கொத்து

பச்சை மிளகாய் - 2

தக்காளி - 1

பெருங்காயத்தூள் - ¼ ஸ்பூன் 

நெய் - சிறிதளவு

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் மஞ்சள் தூள், கோதுமை மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் இஞ்சி, கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்குங்கள். 

இதையும் படியுங்கள்:
திருமண வரம் அருளும் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர்!
Night Dinner Recipes in Tamil

அதன் பிறகு, தக்காளி, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, தக்காளி மென்மையாக வேகும்வரை வதக்கி இறக்கி வைத்து விடுங்கள். இந்த கலவை ஆறியதும் கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 

இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய் சேர்த்து, மாவினை தோசை போல ஊற்றி இரண்டு புறமும் நன்கு வேகவிட்டு எடுத்தால், சூப்பர் சுவையில் இன்ஸ்டன்ட் டின்னர் தயார். 

அச்சச்சோ! இதற்கு என்ன பெயர்னு சொல்ல மறந்துட்டேனே. அட இதுதான் பா Liquid பரோட்டா. இன்னைக்கு நைட்டே இந்த ரெசிபி செஞ்சு பாத்து, உங்களோட கருத்துக்கள எங்க கூட பகிர்ந்துக்கோங்க. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com