பொலிவான சருமமும், நீளமான கூந்தலும் வேண்டும் என்று யாருக்கு தான் ஆசையிருக்காது. பாதாம் பிசின் சாப்பிடுவதால் இந்த இரண்டுமே ஒரே சமயத்தில் நிறைவேறும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம் கூந்தலுக்கும், சருமத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் பாதாம் பிசினில் நிறையவே உள்ளதால், இது ஆரோக்கியமான அழகிற்கு வழிவகுக்கிறது.
பாதாம் பிசின் நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது, எலும்பு வலிமை பெற உதவுகிறது. எனவே பாதாம் பிசினை ஜூசில் சேர்த்து சாப்பிடுவது சுவையானது மட்டுமில்லாமல் ஆரோக்கியமானதும் ஆகும்.
பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயித்தெரிச்சல் ஆகியவற்றிற்கு மிகவும் நல்லது. உடல் சூட்டை போக்க பாதாம் பிசினை சாப்பிடலாம். பாதாம் பிசினை பசும் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். சரி வாங்க, இந்த வெயிலுக்கு குளிர்ச்சியாக பாதாம் பிசின் பாயாசத்தை வீட்டிலேயே செய்யலாம்.
பாதாம் பிசின் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் பிசின் - 10
ஊற வைத்த சப்ஜா விதை - 2 தேக்கரண்டி.
தேங்காய் பால் - 250ml.
நட்ஸ் - தேவையான அளவு.
சக்கரை அல்லது வெல்லம் -தேவையான அளவு.
பாதாம் பிசின் பாயாசம் செய்முறை:
முதலில் பாதாம் பிசின் 10 ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
இப்போது ஒரு கண்ணாடி கிளேசில் ஊற வைத்திருக்கும் பாதாம் பிசினை 2 தேக்கரண்டி சேர்க்கவும், அத்துடன் ஊற வைத்திருக்கும் சப்ஜா விதையை 2 தேக்கரண்டி சேர்க்கவும்.
அரைத்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பால் 250ml கிளேசில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். தேவையான அளவு சக்கரை அல்லது வெல்லம் சேர்த்து கலக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் நட்ஸை மேலே தூவிவிட்டு பரிமாறவும். அவ்வளவு தான். No boil No oil பாதாம் பிசின் பாயாசம் தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை செஞ்சி பார்த்துட்டு சொல்லுங்க.