இட்லி என்பது தென்னிந்தியாவின் பிரதான உணவாக இருந்து வருகிறது. அனைவருமே விரும்பி சாப்பிடும் இந்த காலை உணவு, குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும். என்னதான் இன்று நமது ஊர்களில் வித விதமாக புதிய உணவு வந்துவிட்டாலும், இட்லிக்கு இருக்கும் மவுசு என்றும் குறைவதில்லை. ஏனெனில் இட்லி செய்வது ரொம்ப எளிது, அதே நேரம் இதில் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்தப் பொருட்களும் கலக்கப்படுவதில்லை. முழுவதும் ஆவியில் வேகவைத்து சமைக்கப்படும் உணவு என்பதால், அனைவரின் தேர்வாகவும் இது இருக்கிறது.
பொதுவாகவே இட்லி என்றாலே உளுந்து, அரிசி, வெந்தயம் போன்றவற்றை ஊற வைத்து நன்கு அரைத்து தான் செய்வோம். இதை செய்வதற்கு கொஞ்சம் நேரமும் உடல் உழைப்பும் தேவை. ஆனால் இது எதுவுமே இன்றி நம்மால் இட்லி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. அப்படிப்பட்ட No Oil No Boil இட்லிதான் நாம் இன்று செய்யப் போகிறோம்.
தேவையான பொருட்கள்:
2 கப் அவல்
1 தேங்காய்
1 எலுமிச்சை சாறு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காய் எடுத்து அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதிலிருந்து கெட்டியான தேங்காய் பாலை எடுத்து, எலுமிச்சை பழ சாறை ஊற்றி மூன்று நிமிடங்களுக்கு கலக்கிவிடுங்கள்.
இந்த கலவையை அப்படியே இரவு முழுவதும் வைத்துவிட்டால் இட்லி மாவு போல புளித்துவிடும். மறுநாள் இரண்டு கப் அவலை எடுத்து, அதில் சிறிதளவு உப்பு போட்டு, நாம் தயாரித்து வைத்திருக்கும் கலவையில் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு இட்லி தட்டின் மேலே ஈரமில்லாத துணியைப் பரப்பி, நாம் தயார் செய்து வைத்துள்ள கலவையை இட்லி வடிவத்தில் பரப்பி வைக்க வேண்டும். இதை அப்படியே இட்லி வேக வைப்பது போல ஆவியில் வேக வைத்தால் சூடான No Oil No Boil இட்லி தயார். இதில் நாம் எந்த எண்ணெயும் சேர்க்கவில்லை, அதேபோல உடலுக்கு தீங்கை விளைவிக்கும் எண்ணெயில் பொரிக்கவும் இல்லை.
முற்றிலும் ஆரோக்கியமான முறையில் இதை இன்றே முயற்சி செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.