சர்க்கரை வேண்டாம், நெய் வேண்டாம்… 15 நிமிடத்தில் ரெடியாகும் கொல்கத்தா 'வெல்ல சந்தேஷ்'!

nolen-gur-sandesh-recipe
nolen-gur-sandesh-recipe
Updated on

இனிப்பு வகைகளுக்குப் பெயர் போன ஊர் என்றால், அது கொல்கத்தாதான். ரசகுல்லா, மிஷ்டி தோய் என அவர்களின் இனிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அதில், பெங்காலிகளின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு இனிப்பு என்றால் அது 'சந்தேஷ்' (Sandesh). பொதுவாகச் சந்தேஷ் வெள்ளைச் சர்க்கரை சேர்த்துச் செய்யப்படும். 

ஆனால், குளிர்காலங்களில் மட்டும் பிரத்யேகமாகக் கிடைக்கும் ஈச்ச மர வெல்லத்தை வைத்துச் செய்யப்படும் 'வெல்ல சந்தேஷ்', தேவாமிர்தத்திற்கு நிகரான அலாதியான சுவையைக் கொண்டது. சர்க்கரை, நெய், எண்ணெய் என எதுவுமே இல்லாமல், பாலும் வெல்லமும் மட்டுமே வைத்துச் செய்யப்படும் இந்த ஆரோக்கியமான கொல்கத்தா ஸ்பெஷல் வெல்ல சந்தேஷை, நம் வீட்டிலேயே சுலபமாக எப்படிச் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்

  • எலுமிச்சை சாறு அல்லது வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

  • பேரீச்சை வெல்லம் அல்லது கருப்பட்டி/பாகு வெல்லம் - 1/2 கப்

  • ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்

  • பிஸ்தா அல்லது பாதாம் - சிறிதளவு

தயாரிக்கும் முறை!

சந்தேஷ் செய்வதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படி, தரமான பனீர் தயாரிப்பதுதான். ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி, மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பால் பொங்கி வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு அல்லது வினிகரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். 

இதையும் படியுங்கள்:
இந்தியாவை உலகின் முதன்மை பால் உற்பத்தியாளராக மாற்றியது எப்படி?
nolen-gur-sandesh-recipe

பால் முழுமையாகத் திரிந்து, தண்ணீரும் பனீரும் தனித்தனியாகப் பிரிந்து வரும். இப்போது ஒரு மெல்லிய காட்டன் துணியில் இதை வடிகட்டி, எலுமிச்சையின் புளிப்புச் சுவை போகும் வரை நல்ல தண்ணீரில் இரண்டு முறை அலசிக் கொள்ளுங்கள். பின்னர் துணியை நன்றாகப் பிழிந்து, அதிகப்படியான நீரை வெளியேற்றிவிட்டு, சுமார் 30 நிமிடங்கள் அப்படியே தொங்கவிட வேண்டும்.

நீர் முழுவதும் வடிந்த பனீரை ஒரு அகலமான தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் உள்ளங்கையின் அடிப்பகுதியைப் பயன்படுத்தி, பனீரை எவ்வித கட்டிகளுமின்றி மிகவும் மென்மையாக பிசைய வேண்டும். குறைந்தது 5 முதல் 8 நிமிடங்கள் வரை பொறுமையாகப் பிசைந்தால், பனீர் ஒரு வெண்ணெய் பதத்திற்கு வந்துவிடும். இதுதான் சந்தேஷ் பஞ்சு போலக் கரையும் ரகசியம். 

இந்த மென்மையான பனீர் மாவில், துருவி வைத்துள்ள வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். அசலான கொல்கத்தா சுவைக்கு 'நோலன் குர்' எனப்படும் பேரீச்சை வெல்லம் சிறந்தது; அது கிடைக்காதவர்கள் தரமான கருப்பட்டி அல்லது பாகு வெல்லத்தைப் பயன்படுத்தலாம்.

இப்போது அடுப்பில் ஒரு நான்-ஸ்டிக் பேன் வைத்து, நாம் பிசைந்து வைத்துள்ள பனீர் மற்றும் வெல்லக் கலவையை அதில் சேர்க்கவும். அடுப்பை முற்றிலும் 'சிம்'மில் வைத்து, கைவிடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வெல்லம் உருகி பனீரோடு ஒன்றிணைந்து, கலவை பேனில் ஒட்டாமல் சுருண்டு வரும். 

இதையும் படியுங்கள்:
நாட்படு தேறல்  2-ம் பாகம்; ஏப்ரல் 17 முதல் ஒளிபரப்பு!
nolen-gur-sandesh-recipe

கரெக்டாக 4 முதல் 5 நிமிடங்களில் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இந்தக் கலவை சற்று ஆறியதும், சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாக லேசாக அழுத்தி உங்களுக்குப் பிடித்தமான வடிவத்தில் செய்துகொள்ளுங்கள். அதன் மேல் பொடியாக நறுக்கிய பிஸ்தா அல்லது பாதாமை வைத்து அலங்கரித்தால், ஆஹா... அசலான 'கொல்கத்தா ஸ்பெஷல் வெல்ல சந்தேஷ்' தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com