மக்களைக் கவரும் நுங்கு மில்க் ஷேக்!

Nungu
Nungu
Published on

காலநிலைக்கேற்ப இயற்கையாக கிடைக்கும் காய், கனிகளை உண்டு வந்தால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். கோடைகாலத்தில் வெப்பத்தை தணிக்க நமக்கு பல்வகையான பழங்களும், காய்களும் கிடைக்கின்றன. வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்னி பழம், நுங்கு மற்றும் இளநீர் ஆகியவற்றை கோடையில் பருகினால் உடல் சூட்டைக் குறைக்க முடியும். இவை அனைத்துமே மிக எளிதில் எல்லோருக்கும் கிடைக்கும். அதிலும் நுங்கு கோடையில் குளிர்ச்சியைத் தரும் மிகச் சிறந்த பானம். கிராமங்களில் வாழும் மக்களுக்கு நுங்கு எளிதாக கிடைத்து விடும். ஆனால், நகரங்களில் கிடைப்பது கொஞ்சம் சிரமம். கிராமவாசிகள் அதிகாலையில் நுங்கு எடுத்துக் கொண்டு நகரங்களில் விற்பதுண்டு.

பனைமரத்து நுங்கு கோடையில் மனிதர்களுக்கு கிடைத்த அருமருந்தாகும். நுங்கு வெட்டி எடுத்து சில மணி நேரங்களில் சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். அதிக நேரமாகி விட்டால், அதன் சுவையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு விடும். ஆகையால் நுங்குவின் சுவை குறையாமல் இருக்கவும், அதன் சுவையை மேலும் கூட்டவும் நுங்கு மில்க் ஷேக்கை தயாரித்து விற்கிறது புதுச்சேரியில் உள்ள ஒரு பிரபல கடை.

புதுச்சேரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திரா காந்தி சிலைக்கு அருகில் ஸ்வீட் லஸ்ஸி எனும் ஒரு கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் அந்தந்த காலநிலைகளில் கிடைக்கும் பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் செய்து அசத்தி வருகிறார்கள். அத்திப்பழம், நாவல் பழம், வாழைப்பழம் மற்றும் பலாப்பழம் உள்ளிட்ட பல வகையானப் பழங்களைப் பயன்படுத்தி மில்க் ஷேக் செய்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து ஈர்க்கின்றனர்.

வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் அதிகளவில் கிடைக்கும் பனைமரத்து நுங்குவைப் பயன்படுத்தி மில்க் ஷேக் செய்கிறார்கள். இந்தக் கடையில் விற்பனை செய்யப்படும் நுங்கு மில்க் ஷேக்கிற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சுவையாக கொடுக்கப்படும் இந்த நுங்கு மில்க் ஷேக்கை, புதுச்சேரியில் இருக்கும் குளிர்பானம் குடிக்கும் பிரியர்கள் விருப்பத்துடன் வாங்கி குடித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஈஸியா நுங்கு ரோஸ் மில்க் செய்வது எப்படி?
Nungu

தினந்தோறும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். நுங்கு போன்ற இயற்கை பானங்களை அருந்துவது தான் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படும் நபர்களுக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் மட்டும் அடங்காது. இவர்கள் பனை நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கி விடும். வெயில் காலத்தில் உண்டாகும் அம்மை நோய்களைத் தடுத்து, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடலை சுறுசுறுப்பாக மாற்றும். பனை நுங்கிற்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு.

சாப்பிட நுங்கு கிடைக்காதவர்கள், நுங்கு மில்க் ஷேக் குடிக்கலாம். இப்படிக் குடிப்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று தப்பிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com