கோடையைச் சமாளிக்க சத்தான வெள்ளரி மோர் ரெஸிப்பி!

கோடையைச் சமாளிக்க சத்தான வெள்ளரி மோர் ரெஸிப்பி!

கோடை காலத்தில் இரண்டு விஷயங்களை நம்மால் தவிர்க்கவே முடியாது. ஒன்று தர்பூசணி மற்றொன்று வெள்ளரிக்காய். நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் மிகுந்த இந்த இரண்டும் தான் கடுங்கோடையில் நமது உற்ற துணைவர்கள். மற்றதெல்லாம் (நுங்கு, பதனீர்) சில இடங்களில் கிடைக்கும், சில இடங்களில் கிடைக்காது. ஆனால், மேற்கண்ட இரண்டும் எங்கு வேண்டுமானாலும் எளிதில் கிடைக்கக் கூடியவையாக இருக்கின்றன. இதில் பின்னதை வைத்து ஒரு சத்தான மோர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இதை நாம் அருந்துவதைக் காட்டிலும் நமது குழந்தைகளை அருந்தச் செய்யப் பழக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:

· ¾ கப் நறுக்கிய வெள்ளரித் துண்டுகள்

· ½ கப் தயிர்

· ½ கப் தண்ணீர் (அல்லது தேவையான அளவு)

· ½ டீஸ்பூன் கல் உப்பு

· ¾ டீஸ்பூன் சீரக தூள்

· ½ கருப்பு மிளகு தூள்

· கையளவு புதினா, மல்லி, வெந்தயத்தூள்

· ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்

செய்முறை:

வெள்ளரி, தயிர், தண்ணீர், உப்பு, சீரகப் பொடி, மிளகுத் தூள் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைக்கவும், வெள்ளரி முழுவதுமாக ஸ்மாஷ் ஆக வேண்டும். நன்கு மையாக அரைபட்டதும் கெட்டித் தன்மையைப் பொறுத்து அதில் மீண்டும் தேவையான அளவு தண்ணீர் கலந்து அருந்தும் பதத்தில் நீர்க்கக் கரைத்து ஃப்ரிஜ்ஜில் அரை மணி நேரம் குளிர வைக்கவும்.

பிறகு வெளியில் எடுத்து அதில் மல்லி, புதினா, வெந்தயத்தூள், காயத்தூள் சேர்த்து மணக்க மணக்கப் பரிமாறலாம்.

வெயிலுக்கு இதமாக தொண்டைக்குப் பதமாக சில்லென்று வயிற்றுக்குள் இறங்கி குளிர வைக்கும்.

ஆரோக்யத்துக்கும் மிக மிக நல்லது.

வெள்ளரி மற்றும் தயிரின் ஆரோக்யப் பலன்கள்:

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

அல்சர் போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு அடைவதற்கு தயிர் சாப்பிட்டால் சரியாகிவிடும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளுக்கும் தயிர் சாப்பிடுவது நல்லது.

இங்கு தயிரை, மோராக்கிப் பயன்படுத்துவதால் உணவு செரிமானப் பிரச்சனையும் கிடையாது. இந்த வெயில் காலத்தில் காபி, டீக்குப் பதிலாக இந்த வெள்ளரி மோரைக் குடித்தால் உடல் கலகலவென்று சுறுசுறுப்படைந்தது போலாகி காற்றில் பறப்பது போல மிக லேசாக உணர்வோம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com