சத்துக்கள் நிறைந்த எள்ளு பொடி ரெசிபி!

Nutritious Sesame Powder Recipe
Nutritious Sesame Powder Recipe

துவரை காரசாரமான இட்லி பொடியைதான் இட்லி தோசைக்கு சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் ஒரு முறை இந்த எள்ளி பொடி ரெசிபியை செய்து இட்லி தோசைக்கு சாப்பிட்டுப் பாருங்கள். சுவை டாப் டக்கராக இருக்கும். இதை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையில் கலந்து இட்லி தோசைக்கு பரிமாறலாம். 

பொதுவாகவே இட்லி தோசை செய்தால் அதற்கு செய்யும் குழம்பு வகைகளை விட இட்லி பொடி இருந்தாலே போதும் என நினைப்பவர்கள் ஏராளம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இட்லி பொடியில் தேங்காய் பொடி, பூண்டு பொடி என பல வகைகள் இருந்தாலும், எள்ளு பொடி தனி ருசியைக் கொடுக்கும். அதை எப்படி செய்வதெனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

அரிசி - ¼ கப்

உளுத்தம் பருப்பு - 1 கப்

கடலைப்பருப்பு - ½ கப்

பூண்டு - 5 பல்

பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

எள் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 4

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒரு கப் உளுந்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். உளுந்தம் பருப்பை வறுக்கும்போது கருகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதைத்தொடர்ந்து அரை கப் கடலை பருப்பை அதேபோல எண்ணெய் ஊற்றி வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய் வற்றலையும் அவ்வாறே வறுக்க வேண்டும். 

பின்னர் அதே பாத்திரத்தில் எள் சேர்த்து மிதமான தீயில் வறுக்கும்போது எள் பொரிய ஆரம்பித்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும். அதேபோல அரிசியையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் கருவேப்பிலை, பூண்டு, பெருங்காயம், உப்பு போன்றவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். மேலும் சுவைக்காக விருப்பம் உள்ளவர்கள் புளி சேர்த்துக் கொள்ளலாம். 

வருத்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆரியதும், மிக்ஸியில் ஒன்றாக போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும் போது மிகவும் நைசாக இல்லாமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான எள்ளு பொடி தயார். 

இதை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் கலந்து இட்லி தோசைக்கு பரிமாறினால், கூடுதலாக இரண்டு இட்லியை அனைவரும் சாப்பிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com