வெங்காய வடகம் - குழம்பு வடாம்!

வெங்காய வடகம் - குழம்பு வடாம்!

அடிக்கிற வெயில்ல ஜவ்வரிசி, கூழ் வத்தல், ஓமப்பொடி என வடாம் போட்டுக் கொண்டிருப்போம். அத்தோடு இந்த வெங்காய வடகத்தையும் போட்டு வைத்தால் வத்த குழம்பு, கீரை ஆகியவற்றில் தாளிக்க அருமையான சுவையுடன் இருக்கும். ஒரு வருடம் வரை கெடாமலும் இருக்கும். செய்வதும் எளிது. பண்ணி பாருங்கள்.

தேவை:

சின்ன வெங்காயம் ஒரு கிலோ கடுகு 100 கிராம்

வெந்தயம் 50 கிராம்

சீரகம் 50 கிராம்

கருவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு

உளுத்தம் பருப்பு 100 கிராம் பெருங்காயத்தூள் 2 ஸ்பூன் சோம்பு 50 கிராம்

மஞ்சள் பொடி 20 கிராம் விளக்கெண்ணெய் 50 கிராம் பூண்டு 100 கிராம் உப்பு தேவையான அளவு

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும். நைசாக அரைக்க வேண்டாம். அகலமான ஒரு பாத்திரத்தில் அரைத்த வெங்காயத்தை போட்டு அத்துடன் மேலே குறிப்பிட்ட கடுகு, வெந்தயம், சீரகம், கருவேப்பிலை, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், சோம்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பூண்டை தோல் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று இரண்டாக தட்டி அதையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் போட்டு நன்கு கலந்து விடவும். மரக்கரண்டி அல்லது ஈரமில்லாத கையால் நன்கு கலந்து விடவும். இதனை ஒரு நாள் முழுவதும் நன்கு ஊற விட்டு அடுத்த நாள் காலையில் வெயிலில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்து காய விடவும். இப்படி ஐந்தாறு நாட்கள் நன்கு வெயிலில் காய விட உள் ஈரம் போய் வெங்காயம் மற்ற சாமான்களுடன் கலந்து நன்கு முறுமுறுவென காய்ந்து விடும். இதனை ஈரம் இல்லாத மூடி போட்ட சம்படத்தில் எடுத்து வைத்தால் ஒரு வருடம் வரை கெடாது இருக்கும்.

குழம்பில் இதனை தாளிப்பு வடாமாக பயன்படுத்த சூப்பரான ருசியுடன் அசத்தலாக இருக்கும். கீரை ,வத்த குழம்பு ,பொரித்த கூட்டிலும் இதனை நல்லெண்ணெயில் நன்கு வறுத்து தாளித்துக் கொட்ட மணம், ருசி இரண்டும் கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com