
தக்காளி சட்னியைவிட, தக்காளி கடப்பா நன்றாக இருக்கும். அளவும் நிறைய இருக்கும். டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். விருந்தினர்கள் வருகையில், எங்கள் வீட்டில் செய்வது வழக்கம்.
செய்யத் தேவையான பொருட்கள் :
தக்காளி (மீடியம் சைஸ்)- 4
வெங்காயம் -3 (தோல் நீக்கி நெடுக்காக, மெல்லிசாக நறுக்கி கொள்ளவும்)
பச்சை மிளகாய் -4
தேங்காய் - 10 துண்டு
சோம்பு - 1/4 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
புதினா - கொஞ்சம்
மல்லி இலை - கொஞ்சம்
உப்பு - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 1- 1/2 தேக்கரண்டி
கடுகு- 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜை கரண்டி
செய்முறை:
முதலில், தக்காளிப்பழத்தை லேசான சுடுதண்ணீரில் நன்கு அலம்பவும். 5 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் வைத்து, பின்னர், தோலியை நீக்கிவிடவும். இதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின்னர், அதே மிக்ஸியில் நறுக்கின தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு , பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும்.
புதினா, கொத்தமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு அடிக்கனமான கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், நீளமாகவும், மெல்லிசாகவும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விடவும். இத்துடன், கருவேப்பிலை, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, வதக்கவும். இதில், அரைத்த தக்காளி மற்றும் தேங்காய் விழுதுகளைச் சேர்த்து தேவையான அளவு தண்ணி விட்டு, உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிட்டு கீழே இறக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் புதினா கொத்தமல்லி இலையை அதன் மீது பரவலாக தூவி சுட சுட இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் கலந்து சாப்பிட செம சூப்பராக இருக்கும்.
கம கமவென மணக்கும் தக்காளி-வெங்காயம் ஸ்பெஷல் கடப்பா மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.