
பன்னீரில் அதிகளவு புரதம் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்குகிறது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பன்னீர் மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை பன்னீர் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சப்பாத்தி, புல்கா, பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள பன்னீர் புர்ஜி சூப்பராக இருக்கும். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. வாங்க இன்று எளியமுறையில் பத்தே நிமிடத்தில் பன்னீர் புர்ஜி செய்றது எப்படினு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப.மிளகாய் - 2
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு, பட்டர் - தேவையான அளவு
செய்முறை:
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை கொரகொரப்பாக இடித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 2 டீஸ்பூன் பட்டர் சேர்க்கவும்.
பட்டர் உருகியதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் இடித்த இஞ்சி, பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். (இஞ்சி பூண்டை இடித்து சேர்க்கும்போது வாசனையும், சுவையும் நன்றாக இருக்கும்).
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை (கருகிவிடக்கூடாது) வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது துருவிய பன்னீரை சேர்த்து கிளறவும். பன்னீர் வேக அதிக நேரம் எடுக்காது. 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கிளறிவிடவும்.
மசாலாவுடன் பன்னீர் சேர்ந்து வரும்போது அதில் கரம் மசாலா தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து ஒரு கிளறு கிளறிய பின்னர் கடைசியாக கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான பன்னீர் புர்ஜி ரெடி.
குறிப்பு: வீட்டில் தயாரித்த பன்னீரில் புர்ஜி செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.