
இதுவரை பனீரில் எத்தனையோ விதவிதமான ரெசிபி செய்து நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் பனீரில் டிக்கா, பட்டர் மசாலா, குருமா போன்றவற்றை தான் அதிகம் செய்வார்கள். ஆனால் ஒருமுறை சற்று வித்தியாசமாக பன்னீர் பயன்படுத்தி கிரேவி செய்து பாருங்கள். இதன் சுவை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பனீர் - 100 கிராம்
இஞ்சி - சிறிதளவு
கசகசா - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வெண்ணெய் - 2 ஸ்பூன்
பால் - 1 கப்
முந்திரி - 5
பிரியாணி இலை - 2
எண்ணெய் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 2
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் இஞ்சி, மிளகாய், முந்திரி பருப்பு, கசகசா சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து பனீர் துண்டுகளை பொன்னிறமாக வறுக்க வேண்டும். வருத்த பனீர் துண்டுகளை பாலில் சேர்த்து ஊற வைக்கவும்.
இதைத்தொடர்ந்து மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் அரைத்த மசாலா கலவையை சேர்த்து நன்றாகக் கிளறி, உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளற வேண்டும்.
இறுதியில் பச்சை வாடை போனதும் பாலில் ஊற வைத்துள்ள பனீருடன் சேர்த்து மொத்தமாக இந்த கலவையில் ஊற்றி நன்றாக வதக்கி வேக வைத்தால், முற்றிலும் புதுமையான பனீர் கிரேவி தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவாகும். ஒருமுறை இதை வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.