வளவனூர் வரதராஜப் பெருமாள் கோயில் புளியோதரை ரகசியம்!

வரதராஜப் பெருமாள் கோயில்
வரதராஜப் பெருமாள் கோயில்

மார்கழி மாதம் வந்தாலே எங்க வளவனூர் குமார குப்பம் வரதராஜ பெருமாள் கோயிலில் உற்சவங்கள், பஜன்கள் எல்லாம் களைக்கட்டும். பெருமாளை தரிசிக்கணும்னா முதலில் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டிருக்கும் ஆஞ்சநேயரை தரிசித்து விட்டுத்தான் மேலே செல்ல வேண்டும்.  ஆஞ்சநேயர்  அவ்வளவு அழகாக இருப்பார். பிறகு தெய்வீக கருணையுடன் அருள்பாலிக்கும் ஆண்டாள். இவர்களுக்கு  வணக்கத்தைப் போட்டுவிட்டு மேலே செல்ல கம்பீரமாய் வரதராஜ பெருமாள் காட்சி தருவார்.

மார்கழி மாதம் முழுவதுமே   தினம் தினம் புளியோதரை, வெண்பொங்கல்,  சர்க்கரை பொங்கல், சுண்டல், கேசரி என விதவிதமான பிரசாதங்கள்… மடப்பள்ளியில் இருந்து நாசியைத் துளைக்கும். 

சீனு மாமா மடப்பள்ளியின் மொத்த குத்தகைதாரர்.  இவர் கைபட்ட வெண்பொங்கல் நோய் தீர்க்கும் அருமருந்து. சர்க்கரைப் பொங்கல் கேட்கவே வேண்டாம்… வாயில் போட்டால் கரையும். புளியோதரை இன்னும் கொஞ்சம் தரமாட்டார்களா? என ஏங்க வைக்கும் சுவையில் இருக்கும். எத்தனையோ உணவகங்களில் 'வெரைட்டி ரைஸ்' என்ற பெயரில் 'புளிசாதம்' சாப்பிட்டாலும் எங்கள் வளவனூர் பெருமாள் கோயிலின் புளியோதரையின் சுவையை அடித்துக்கொள்ளவே முடியாது. வரதராஜரை மனதார நினைத்தாலே கோயிலின் பின்னாடி மடப்பள்ளியிலிருந்து வரும் புளியோதரையின் வாசம்தான் மனதிற்குள் முதலில் உள்நுழையும்.

கோயில் புளியோதரை செய்வது எப்படி? – சீனு மாமா ரெசிபி

தேவையானவை:
பழைய புளி (1 பெரிய கொய்யாக்காய் அளவு), மஞ்சள் தூள் ½ டீஸ்பூன், கல்உப்பு தேவையான அளவு.
வறுத்துப்பொடிக்க:

வெந்தயம் 1 டீஸ்பூன், தனியா 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு / உளுத்தம்பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகு / சீரகம் தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 8 அல்லது 10.

கோயில் புளியோதரை
கோயில் புளியோதரை www.youtube.com

தாளிக்க – 1:
கடுகு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 8, கறிவேப்பிலை 4 ஆர்க்கு, பெருங்காயத்தூள் 2 டீஸ்பூன்.

தாளிக்க – 2:
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தலா 1 டேபிள்ஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை 2 டேபிள்ஸ்பூன், வாசமான எள்ளு எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
முடி கொட்டுவது... பராமரிப்பது எப்படி?
வரதராஜப் பெருமாள் கோயில்

செய்முறை:
முதலில் புளியை நன்கு கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். இதில் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்களை வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்,  காய்ந்த மிளகாய் தாளித்து (தாளிக்க -1) கரைத்து, வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலைவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டால் முடிவும். குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரியும்சமயம் பொடித்து வைத்துள்ள பொடியைப் போட்டு ஒரு கொதிவிட்டு தாளித்து (தாளிக்க – 2) அதன்மேல் கொட்டி, ஒருகிளறு கிளறி இறக்கவும். சாதத்தை உதிராக வடித்துக்கொண்டு, தேவையான புளிக்காய்ச்சலை விட்டு, சாதம் உடையாமல் இதமா பதமா கிளற... பெருமாள் கோயில் புளியோதரை உங்களைப் பார்த்து கண் சிமிட்டும். செய்துதான் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com