தொண்டை வலிக்கு மாத்திரை தேடாதீங்க... 5 நிமிஷத்துல ரிலீஃப் தரும் பாட்டி வைத்தியம்!

Rasam Varieties
Rasam Varieties
Published on

வானிலை லேசாக மாறினாலே போதும், நம்மில் பலருக்குத் தொண்டையில் ஒரு விதமான கரகரப்பும், லேசான சளியும் வந்து ஒட்டிக்கொள்ளும். இருமி இருமித் தொண்டையே புண்ணாகிவிடும். உடனே மெடிக்கல் ஷாப்பிற்கு ஓடி சிரப் வாங்குவதை விட, நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியில் இதற்கான தீர்வு இருக்கிறது. 

மிளகும் சீரகமும் சேரும்போது அது உணவாக மட்டுமல்லாமல், மருந்தாகவும் மாறுகிறது. நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவையுடனும், அதே சமயம் தொண்டைக்கு இதமாகவும் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான ரசத்தை எப்படி வைப்பது என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

  • தக்காளி - 2 

  • புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

  • பூண்டு - 5 பற்கள்

  • மிளகு - 1 தேக்கரண்டி

  • சீரகம் - 1 தேக்கரண்டி

  • காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2 

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • எண்ணெய் அல்லது நெய் - 1 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - 2 முதல் 3 கப்.

  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை: 

  1. முதலில் தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்காமல், கைகளால் நன்றாகக் கசக்கிப் பிழிய வேண்டும். தக்காளியின் தோல் தனியாக வரும் அளவுக்கு மசிக்க வேண்டும். 

  2. ஊற வைத்த புளியைக் கரைத்து, அந்தத் தண்ணீரைத் தக்காளி விழுதோடு சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துத் தனியாக வைத்துவிடுங்கள்.

  3. ஒரு சிறிய உரல் அல்லது மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு பற்கள் மற்றும் சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து 'கொரகொரப்பாக' இடித்துக்கொள்ள வேண்டும். நைஸாக அரைக்கக் கூடாது. பூண்டு நசுங்கி, மிளகு உடைந்தால்தான் ரசத்தின் வாசனை தூக்கலாக இருக்கும்.

  4. அடுப்பில் ரசப் பாத்திரத்தை வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். நெய் ஊற்றினால் மணம் இன்னும் கூடும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் மற்றும் இடித்து வைத்த பூண்டு-மிளகு கலவையைச் சேர்த்து வதக்கவும். 

  5. பூண்டு சிவந்து வரும்போது வரும் வாசனை இருக்கிறதே, அதுவே பாதி சளியை விரட்டிவிடும்.

  6. வதங்கிய கலவையில், கரைத்து வைத்திருக்கும் தக்காளி-புளி தண்ணீரை ஊற்றவும். இப்போது அடுப்பை மிதமான தீயிற் வைக்கவும். ரசம் தளதளவெனக் கொதிக்கக் கூடாது. 

  7. மேலே நுரை கூடி, லேசாக ஒரு கொதி வரும்போது அடுப்பை அணைத்துவிட வேண்டும். கடைசியாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
பூவல்ல அது ஒரு பொக்கிஷம்: சாமந்திப் பூவின் மருத்துவ ரகசியங்கள்!
Rasam Varieties

மிளகின் காரமும், பூண்டின் மருத்துவ குணமும் சேர்ந்து தொண்டையில் உள்ள கிருமிகளை அழிக்கும். அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்து. காய்ச்சல் வந்த பிறகு நாக்கில் ருசி தெரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, இந்த ரசம் சாப்பாட்டின் மீதான ஆர்வத்தைத் தூண்டும்.

சுடச்சுடச் சாதத்தில் நெய் விட்டு, இந்த ரசத்தை ஊற்றிச் சாப்பிட்டால், அடுத்த நாளே உடல் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள்.

(இது ஒரு பொதுவான வீட்டு வைத்தியம் மட்டுமே. தீராத நோய்த்தொற்று அல்லது ஒவ்வாமை இருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com