
நம்மில் பலர் சாதம் மீதமானால், பெரும்பாலும் வடகமாக அதை தயாரிப்போம். ஆனால், மீந்து போன வெள்ளை சாதத்தை வைத்து கட்லட் செய்யலாம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இதற்கான ரெசிபியை பார்க்கலாம் வாங்க. இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
நவீன காலத்தில் கட்லட், பப்ஸுக்கு மவுசு அதிகம். மால், தியேட்டர் என அனைத்து இடங்களிலும் தற்போது கட்லட் விற்கப்படுகிறது. வீட்டில் எல்லாம் கட்லட் செய்ய முடியுமா என பலரும் அதை ஸ்கிப் செய்து விடுவார்கள். ஆனால் மீந்த சாதத்திலேயே அசத்தலான கட்லட் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
ஒரு கப் மீந்தசாதம்.
2 வேகவைத்த உருளைக்கிழங்கு
அரை கப் வறுத்த கடலை மாவு
பொடியாக நறுக்கிய வெங்காயம்
2 தேக்கரண்டி துருவிய கேரட்
2 தேக்கரண்டி நறுக்கிய பீன்ஸ்
பொடியாக நறுக்கிய 1 பச்சைமிளகாய்
1 ஸ்பூன் மஞ்சள்தூள்
1 ஸ்பூன் சீரகத்தூள்
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
1 ஸ்பூன் மல்லி தூள்
தேவையான அளவு உப்பு
செய்முறை:
மிஞ்சிய சாதத்தை வேகவைத்த உருளைக்கிழங்குடன் நன்றாக மசித்து வைத்து கொள்ளவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், காய்கறிகளை சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக மசாலா பொருட்களான மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும். கடைசியில் கடலை மாவு சேர்த்து வடை போல் பிசைந்து உருண்டைகளாக உருட்டி பிறகு கட்லெட் வடிவத்தில் தட்டவும். கடலை மாவு தான் ஒட்டமால் அந்த கட்லெட் பதத்திற்கு மாற்ற உதவும்.
சிலர் இதய வடிவில் கூட கட்லெட் செய்வார்கள். உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டால், அதை கூட செய்யலாம். பிறகு இந்த கட்லெட்களை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான கட்லெட் ரெடி. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
முக்கிய குறிப்பு: கட்லெட்டுகளுக்கு மாவு சேர்க்கும்போது, மாவு அதிகமாகிவிட்டால், கொஞ்சம் சாதம் சேர்த்து கலக்கலாம். கட்லெட்களை சூடாக சாப்பிடவே சுவையாக இருக்கும்.