
புடலங்காய் என்றாலே பலரும் வெறுக்கத்தான் செய்வார்கள். அதுவும் குறிப்பாக குழந்தைகள் ஓடி விடுவார்கள். காய்கறிகளே பிடிக்காது என்று சொல்பவர்களுக்கு வேறு வகையில் செய்து கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். அதுவும் தற்போது வெயில் காலம் என்பதால் தண்ணீர் காய்கறிகளை சாப்பிடவே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்படி தான் புடலங்காயையும் எப்படி சாப்பிட வைக்கலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
நிச்சயம் தினசரி அனைவரது வீட்டிலும் இட்லி, தோசை செய்வோம். அதற்கு என்ன சட்னி செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கும் இது ஒரு புதுவிதமாக இருக்கும். இந்த சட்னி இட்லி, தோசை மட்டுமின்றி மற்ற உணவுகளுக்கும் மிகவும் நல்ல உடன் பொருந்தும். உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? பொதுவாக, புடலங்காயை வைத்து பொரியல் அல்லது கூட்டு தான் செய்வோம். ஆனால், புடலங்காயை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள்..
என்னென்ன தேவை...?
1 சிறிய புடலங்காய்
நல்லெண்ணெய்
உளுத்தம்பருப்பு
3 காஷ்மீரி மிளகாய்
துருவிய தேங்காய்
மஞ்சள் தூள்
உப்பு
1 சிறிய துண்டு புளி
கடுகு
கறிவேப்பிலை சிறிதளவு
1 வர மிளகாய்
பெருங்காயம் சிறிதளவு
எப்படி செய்வது...?
முதலில், புடலங்காயை நீளவாக்கில் நறுக்கவும். பின்னர் விதைகளை நீக்கி குத்துமதிப்பாக நறுக்கவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெயை சூடாக்கி, உளுத்தம்பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். உளுத்தம்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து, அவை பாதியாக சுருங்கும் வரை மிதமான தீயில் வதக்கவும். தொடர்ந்து துருவிய தேங்காய், உப்பு, மஞ்சள் மற்றும் ஒரு சிறிய உருண்டை புளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் முழுமையாக ஆற விடவும்.
பின்னர் இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து கரடுமுரடான பேஸ்ட்டாக அரைக்கவும். அதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
ஒரு சிறிய கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளித்து, அதனை சட்னி மீது கொட்டி கிளறவும். சூப்பரான புடலங்காய் சட்னி ரெடி. இது இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நிச்சயம் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்க.