
என்ன செய்வதென்று தெரியாமல் கீழே போடும் ஆரஞ்சு பழ தோலை வைத்து டேஸ்டியான துவையல் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
பலருக்கு ஆரஞ்சு பழம் மிகவும் பிடிக்கும். வைட்டமின் சி நிறைந்த இந்த பழத்தில் ஏராளமான சத்துகள் உள்ளது. சிட்ரஸ் அமிலம் நிறைந்த இந்த பழம் மிகவும் புளிப்பு சுவையாக இருக்கும். ஆனால் இந்த பழத்தை ஜூஸாகவோ, பழமாகவோ சாப்பிடும் மக்கள், தோலை அப்படியே குப்பையில் போடுவார்கள். அப்படி ஒரு கிலோ பழத்தின் தோலையும் தூக்கி எறிவார்கள். ஆனால் இந்த தோலை வைத்து சட்னி செய்யலாம் என்று தெரிந்தால், நீங்கள் தூக்கி போடுவீங்களா?
தோசை, இட்லிக்கு என்ன செய்வதென்று தெரியாமல், தினமும் ஒரே சட்னியை செய்து வருபவரா நீங்க? உங்க வீட்டு குழந்தைகள் வித்தியாசமா ஏதாவது வேண்டுமென்று கேட்கிறாங்களா? இந்த ரெசிபி ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும்.
ஆரஞ்சு பழ தோலில் வைட்டமின் சி, நார்ச்சத்துகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற தாவர சேர்மங்களும், பல ஊட்டச்சத்துக்களும் நிரம்பி காணப்படுகிறது. இது, இதய ஆரோக்கியத்திற்கும், செரிமான மண்டலம் நன்றாக வேலை செய்வதற்கும் உதவும். ஆரஞ்சு தோலில் உள்ள பாலிபினால்கள் உடல் பருமன், அல்சைமர் நோய் மற்றும் டைப் -2 நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.
இப்போது இந்த துவையலை எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழ தோல்
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
புளி
வரமிளகாய்
வெல்லம்
அனைத்துமே உங்களுக்கு தேவையான அளவு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
செய்முறை:
முதலில் ஆரஞ்சு பழ தோலை பொடியாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து வேகவிட வேண்டும். தண்ணீர் பாதி அளவு வற்றி வந்த பிறகு, தோலை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதையடுத்து, ஒரு வானலியில் எண்ணெய், உளுத்தம்பருப்பு, வரமிளகாய், புளி, பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுத்து கொள்ளவும். பிறகு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறுதளவு வெல்லம் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஆரஞ்சு தோலில் அட்டகாசமான துவையல் ரெடி. இதை நீங்கள் சாதத்திற்கோ, இட்லி, தோசைக்கோ வைத்து சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும்.