
அவல் மிகவும் சத்து நிறைந்த ஓர் உணவு. அதுவும் தீட்டப்படாத சிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதனைக் கொண்டு கேசரி, பொங்கல், உப்புமா என செய்வதுபோல் மொறுமொறுப்பான தோசையும் செய்து அசத்தலாம். கைவசம் தோசை மாவு இல்லாத போது கை கொடுக்கும் சிறந்த மாற்று பொருள் இந்த அவல். இதனைக் கொண்டு சூப்பரான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிகப்பு அவல் 200 கிராம்
பச்சரிசி. 2 டேபிள்ஸ்பூன்
தயிர் 1/2 கப்
பச்சை மிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு
வெங்காயம் ஒன்று
செய்முறை:
சிகப்பு அவலை வெறும் வாணலியில் சூடு வர வறுத்துக்கொள்ளவும். சிறிது ஆறியதும் அவல், பச்சரிசி இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொண்டு அரை கப் தயிர் சேர்த்து அரைக்கவும். அரைத்ததை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவுக்கு நீர் (தோசை மாவு பதத்திற்கு) விட்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதனை தோசை கல் நன்கு சூடானதும் விட்டு தோசையாக வார்த்து எடுக்க பொன் முருகலுடன் சுவையாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள இட்லி மிளகாய் பொடி அல்லது தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.