

சபரிமலைக்குப் போய் வரும் பக்தர்கள் அனைவரும் கொண்டு வரும் முக்கியமான பிரசாதம் அரவணைப் பாயசம்.
திருப்பதி கோவில் வெங்கடாசலபதி லட்டு எவ்வாறு சுவையாக உள்ளதோ, அதேமாதிரி சபரிமலை ஐயப்பன் கோவில் அரவணைப் பாயசமும் அருமையாக இருக்கும். திருப்பதிக்கு லட்டு! சபரி மலைக்கு அரவணைப் பாயசம் எனக்கூறுவதுண்டு.
நெய்ப்பாயசம் எனவும் அழைக்கப்படும் அரவணைப் பாயசம், கேரள பாரம்பரிய அரிசி, நெய், வெல்லம், ஏலக்காய், பொன்னிறமாக வறுத்த தேங்காய், உலர் திராட்சை, சுக்குப்பொடி ஆகியவைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. டப்பாவில் போட்டு சீல் வைத்து தரப்படும் நெய் ஒழுகும் அரவணைப் பாயசம் அநேக நாட்கள் கெட்டுப் போகாமலிருக்கும். மகரவிளக்கு சமயத்தில், அரவணைப் பாயசம், முக்கியமான பிரசாதமாக கருதப்படுகிறது.
முக்கியமான பிரசாதமாக அரவணைப் பாயசமாக பின்னணிக் கதை ஒன்று கூறப்படுகிறது. அது...
மாளிகை புரத்தம்மனாகிய லீலாவதி, ஐயப்பன் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை மணமுடிக்க விரும்பினார். ஐயப்பனுக்கு பிடித்த நெய் பலகாரங்களை செய்து அனுப்பினார். அதில் அரவணைப் பாயசமும் பிரதான பங்கேற்றது எனக் கூறப்படுகிறது. அதேபோல, ஐயப்பன், மணிகண்டனாக பந்தள அரண்மனையில் இருக்கையில், அவருக்காக இனிப்புக் கலந்த நெய்க் கஞ்சி வழங்கப்பட்டதே, அரவணைப் பாயசமாக மாறியது என்கின்றனர். அரவணைப் பாயசம் முதலில் ஐயப்பனுக்கும் பிறகு மாளிகைப் புரத்தம்மனுக்கும் நிவேதனமாக வைக்கப்படுகிறது.
அரவணைப் பாயசம் செய்முறை என்ன..?
அடிக்கனமான பாத்திரத்தில் கொஞ்சம் நிறைய நெய்விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதே நெய்யில், ஒரு குறிப்பிட்ட அளவு அரிசியைச் சேர்த்து வறுத்தெடுத்துக் கொள்ளவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பின்னர் வெல்லம் சேர்த்து கிண்டவும். வெல்லம் உருகுகையில், கலவை கெட்டியாகும். நெய் பிரிந்து வரும். நன்றாக கொதித்த பின், ஒன்றிரண்டாக நசுக்கிய ஏலக்காய், சுக்குப் பொடி போட்டு மிக்ஸ் செய்யவும்.
அடுப்பிலிருந்து கீழே இறக்கிய பின், வறுத்த தேங்காய்த் துண்டுகள், உலர் திராட்சை, மேலும் கொஞ்சம் நெய் விட்டு நன்றாக கலந்துவிட்டால், சுவையான அரவணைப் பாயாசம் ரெடியாகிவிடும்.
உபரி தகவல்கள்:
அரவணைப் பாயசத்திற்கு அடுத்த முக்கிய நைவேத்யம் நெய்யில் தயாரிக்கப்பட்ட கரடு-முரடான உண்ணியப்பம்.
புலிப்பால் தேடி காட்டிற்குள் சென்ற மணிகண்டன் உண்ணியப்பம் எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
சென்ற மண்டல சீசனில், 1.50 கோடி டின் அரவணைப் பாயச பிரசாதம் விற்பனை ஆகி உள்ளது என்றும், சபரிமலை சீசன் சமயம் விற்பனை, ரூபாய் 350 கோடியைத் தாண்டுகிறதென்றும் கூறப் படுகிறது.
இந்திய குடிமக்கள் அஞ்சலகம் வழியே, டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக முன் பதிவு செய்து ஐயப்ப சுவாமி பிரசாதம் பெறலாம்.
ஐயப்ப சுவாமி பிரசாத பார்சலில், அரவணைப் பாயசம், மஞ்சள், குங்குமம், விபூதி, நெய் போன்றவைகள் இருக்கும்.
வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, திப்பிலி, இஞ்சி கலந்த பானகத்தை ஐயப்ப பக்தர்கள் வழிப் பயணத்தின்போது அருந்துவதுண்டு. உடலில் நீர்ச் சத்து குறையாமல் பாதுகாக்க இப்பானகம் பெரிதும் உதவும்.
ஐயப்பனுக்கு காலை உஷத்கால பூஜை நடைபெறுகையில் தேங்காயை இடித்துப் பிழிந்த பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது.
சுவாமியே சரணம் ஐயப்பா!