
தீபாவளிக்கு வழக்கமான லட்டு செய்வது போர் அடிக்கிறதா? இந்த தீபாவளிக்கு ஜவ்வரிசியில் வித்தியாசமாக சாபுதானா லட்டு செஞ்சு பாருங்க. ஜவ்வரிசியில் செய்யும் லட்டு இனிப்பு குறைவாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த தீபாவளிக்கு அனைவரும் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய இனிப்பு வகைகளில் இந்த ஜவ்வரிசி லட்டும் ஒன்று. இதை ஜவ்வரிசி லட்டு, சாகோ லட்டு என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - ½ கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 10
தேங்காய் - ½ கப்
நெய் - 250மி
சர்க்கரை - ¼ கப்
செய்முறை:
ஜவ்வரிசியில் நீங்கள் கிச்சடி, லட்டு போன்றவற்றை செய்வதற்கு கெட்டியான ஜவ்வரிசியை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் உள்ள தூசியை நீக்கிவிட்டு கடாயில் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். இது நன்றாக வறுபட குறைந்தது 15 நிமிடம் தேவைப்படும்.
பின்னர் அதை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில் ஏலக்காய் சர்க்கரை சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை ஜவ்வரிசி பொடியில் சேர்த்து கூடவே துருவிய தேங்காய் சேர்க்க வேண்டும். தேங்காய் சேர்ப்பதற்கு முன் கடாயில் கொஞ்சம் நெய் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வறுத்து கொள்ளவும்.
இப்போது கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து அந்த கலவையில் சேருங்கள். இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்தால், சுவையான சாபுதானா லட்டு தயார்.
இதை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். குறிப்பாக காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்திருந்தால் நீண்ட நாட்கள் வரும்.