
பண்ணைக் கீரை கடையல்:
பண்ணைக் கீரை 1 கட்டு
தக்காளி 2
சின்ன வெங்காயம் 10
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு, பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 1
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். புளியை நீர்க்க கரைத்து கீரையுடன் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, 2 பச்சை மிளகாய், 1 காய்ந்த மிளகாய் சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் கீரையுடன் சேர்ந்து தேவையான உப்பு போட்டு கடையவும். மத்து இல்லையென்றால் மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து சுற்றவும். விழுதாக அரைக்க வேண்டாம். மிகவும் ருசியான பண்ணைக் கீரை கடையல் தயார்.
சூடான சாதத்தில் நெய் விட்டு கீரை மசியலை சேர்த்து சாப்பிட பண்ணைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அல்சர் எனப்படும் குடல் புண்ணை போக்கும்.
சிக்கிடிகாய் பொரியல்:
கொத்தவரங்காய் கால் கிலோ
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 10
சர்க்கரை 1/2 ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
வரமிளகாய் 2
சோம்பு 1/2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்,கறிவேப்பிலை, எண்ணெய்
மிக்ஸியில் தேங்காய், மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கொத்தவரங்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு வேக விட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் நிறம் மாறி வதங்கியதும் வேகவைத்துள்ள கொத்தவரங்காயை சேர்த்து கிளறவும். அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து கிளறி கடைசியாக சிறிது சர்க்கரை தூவி இறக்க மிகவும் ருசியான சிக்கிடிகாய் பொரியல் தயார்.